✠ புனிதர் முதலாம் கெலாசியஸ் ✠
✠ புனிதர் முதலாம் கெலாசியஸ் ✠
(St. Gelasius I)
49ம் திருத்தந்தை:
(49th Pope)
பிறப்பு: கி.பி. 5ம் நூற்றாண்டு
ரோம ஆப்ரிக்கா அல்லது ரோம்
(Roman Africa or Rome)
இறப்பு: நவம்பர் 19, 496
ரோம், இத்தாலி அரசு
(Rome, Ostrogothic Kingdom)
நினைவுத் திருநாள்: நவம்பர் 21
ஆப்ரிக்கா நாட்டு கருப்பினத்தைச் சார்ந்த புனிதர் முதலாம் கெலாசியுஸ், கி.பி. 492ம் ஆண்டு, மார்ச் மாதம், 1ம் தேதி முதல், தமது மரணம் (19 நவம்பர் 496) வரை திருத்தந்தையாக ஆட்சி புரிந்தவராவார். 49ம் திருத்தந்தையான இவர், “பெர்பர்” இனத்திலிருந்து (Berber Origin) வந்த ரோம் நகரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆயரும் ஆவார். எழுத்தாளருமான இவரது படைப்பாற்றல் இவரை பண்டைய மற்றும் ஆரம்ப மத்திய காலத்தின் இடையே கூரான முனையாக வைத்திருந்தது என்பர். இவருக்கு முந்தைய திருத்தந்தை “மூன்றாம் ஃபெலிக்ஸ்” (Pope Felix III) இவரை பணியில் அமர்த்தினார். திருத்தந்தையர் ஆவணங்களை தயாரித்தல் மற்றும் பாதுகாத்தல் இவரது பணியாகும்.
இவர் மிக சிறு வயதில் குருவானார் என்று கூறப்படுகின்றது. 483ம் ஆண்டிலிருந்து திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் மிக சிறந்த விதத்தில் திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். திறமையான, அர்த்தமுள்ள முடிவுகள் எடுப்பதில் இவர் வல்லவராக திகழ்ந்தார். இறையியலாளர்கள் பலர் இவரின் ஆலோசனையை நாடி வந்தனர். திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ், கி.பி. 492ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் நாளன்று இறந்துவிடவே, கெலாசியுஸ் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தழைத்தோங்கி இருந்த அரசர்களின் ஆட்சியை முறியடித்து திருச்சபையில் கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். கிறிஸ்துவின் நற்செய்திக்கு முதலிடம் கொடுத்தார். ஏழை மக்களின் வாழ்வுக்கென்று பல மையங்களை ஏற்படுத்தினார். திருச்சபை சொத்துகளில் நான்கில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுத்தார்.
இவர், தாம் வாழ்ந்து வளர்ந்த ஏழ்மையை என்றும் மறவாமல் இறுதிவரை வாழ்ந்தார். ஏழைகளுக்கென்று தன் ஆட்சியில் தனி இடம் ஒதுக்கினார். அம்மக்களின் ஈடேற்றத்திற்காக இரவும் பகலும் அயராது செபித்தார். இயேசு வாழக் கூறிய அன்பான வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவர் திருச்சபையில் பல சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இவர் திருப்பலி பூசை புத்தகத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார். இவர் இறந்தபிறகு இவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது என்பதை கண்டறிய இயலவில்லை
Comments are closed.