பொதுக் காலத்தின் முப்பத்து இரண்டாம் வாரம் சனிக்கிழமை

“அறிமுகமில்லாதவர்களுக்கு உதவுவது நமது கடமை”
விருந்தோம்பலுக்குப் பெயர்போன பேராயர்:
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ‘செயிண்ட் ஆண்ட்ரூஸ்’ என்ற மறைமாவட்டத்தின் பேரயாராக இருந்தவர் ஹென்றி வார்ட்லா பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், தன்னை நாடி வருகிறவர்களுக்கு முகங்கோணாமல் உதவிசெய்ததைப் பார்த்துவிட்டு இவருக்கு நெருங்கமாக இருந்த சிலர், “இவர் தன்னை நாடி வருகிறவர்களுக்கெல்லாம் அள்ளியள்ளிக் கொடுத்துவிட்டால் மறைமாவடத்தின் சொத்துக்கள் எல்லாம் சீக்கரம் காலியாகிவிடும்” என்று பேசிக்கொண்டார்கள்.
பின்னர் அவர்கள், பேராயர் ஹென்றி வார்ட்லா எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவதைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, அவரிடம் சென்று, “பேராயர் பெருந்தகையே! யாருக்கெல்லாம் உதவி செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டால், ஒரு பட்டியலைத் தயாரிப்பதற்கு வசதியாக இருக்கும்” என்று அவரது பதிலுக்காகப் பேனா, காகிதத்தோடு காத்திருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “பேனா காகிதமெல்லாம் வேண்டாம் ஃபைப் அங்குஸ் ஆகிய இரண்டு மாகாணங்களிலிருந்து வருகிறவர்களுக்கெல்லாம் உதவி செய்யுங்கள்” என்றார். இதைக்கேட்டதும் அவர்கள் ஆடிப் போய்விட்டார்கள்.
ஃபைப், அங்குஸ் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் இருந்தவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். அதனால்தான் பேராயர் ஹென்றி வார்ட்லா அந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எப்போது வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று சொன்னார். வரலாற்று ஆசிரியர்கள், பேராயர் ஹென்றி வார்ட்லாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் தன்னை நாடிவருகிறவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்ததே இல்லை என்கிறாhர்கள்;.
ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்மை நாடி வருகிறவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதைப் பேராயர் ஹென்றி வார்ட்லா நமக்குக் கற்றுத் தருகின்றார். இன்றைய இறைவார்த்தை, “அறிமுகமில்லாச் சகோதரர்களுக்கு உதவுவது நமது கடமை” என்கிறது. யார் இந்த அறிமுகமில்லாச் சகோதரர்கள்? எதற்காக நாம் இவர்களுக்கு உதவ வேண்டும்? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தொடக்கத் திருஅவையில் ஒருசிலர், கால்நடையாகவே பல இடங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். இவர்களுக்கு உண்ண உணவும், தங்க உறைவிடமும் சில சமயங்களில் கிடைக்காமலேயே போயின. இந்நிலையில் காயு என்ற இறைநம்பிக்கையாளர் நற்செய்திப் பணியாளர்களைத் தன்னுடைய வீட்டில் ஏற்று அவர்களுக்கு உணவளித்து, தங்க இடமும் அளித்தார். இதனைப் பாராட்டி யோவான் இன்றைய முதல் வாசகத்தில், “நீர் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்கு செய்தவற்றையெல்லாம் பார்க்கும் போது, நீர் நம்பிக்ககைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது” என்று சொல்லிவிட்டு, “இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை” என்கிறார்.
நற்செய்தியில் இயேசு ‘கைம்பெண்ணும் நேர்மையற்ற நடுவரும்’ உவமையைச் சொல்கிறார். இந்த உவமையில் வரும் நேர்மையற்ற நடுவர், கைம்பெண் தனக்கு அறிமுகமில்லாதவராக இருந்தாலும், அவருடைய தொந்தரவின் பொருட்டு அவருக்கு நீதி வழங்குகிறார். அவரே அறிமுகமில்லாத கைம்பெண்ணுக்கு உதவும் போது, கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அறிமுகமில்லாதவர்களுக்கு உதவுவது நமது கடமையாகும்.
சிந்தனைக்கு:
 ஒருவர் மற்றவருக்கு செய்யும் உதவியில்தான் இந்த வையகம் தழைக்கின்றது.
 நற்செய்திப் பணியாளர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம்.
 விருந்தினர் என்பதற்குப் புதியவர் என்ற மற்றொரு பொருளும் உண்டு. அதனால் அறிமுகமில்லாதவருக்கு அளிக்கப்படுவதுதான் விருந்து என்று பெயர்.
இறைவாக்கு:
‘விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்’ (உரோ 12: 13) என்பார் புனித பவுல். எனவே நாம் நம்மை நாடி வருகின்றகின்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக, நற்செய்திப் பணியாளர்களுக்கு நல்ல முறையில் விருந்தோம்பி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.