அக்டோபர் 14 : நற்செய்தி வாசகம்

உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
ஒன்றையும் கடவுள் மறப்பதில்லை”
பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I எபேசியர் 1: 11-14
II லூக்கா 12: 1-7
“ஒன்றையும் கடவுள் மறப்பதில்லை”
இன்னும் எதற்கு அச்சம்?
ஒருவர் தனக்கு நன்கு அறிமுகமானவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவரது வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய நாய் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததும் போனவரை அச்சம் தொற்றிக்கொண்டது. வீட்டுக்காரர் வெளியே வந்து, அவரை உள்ளே அழைத்ததும்தான் அவரிடமிருந்த அச்சம் விலகியது
“நாய் இவ்வளவு பெரிதாக இருக்கின்றது! இதைக் கண்டதும் அச்சம் தொற்றிக்கொண்டுவிட்டது” என்று வந்தவர் அதைப் பற்றிப் பேச்சை எடுத்தபோது, “இந்த நாய், வேட்டை நாய் இனத்தைச் சார்ந்தது. வேட்டைக்குச் செல்லும்போது இதை என்னோடு கூட்டிச் செல்வேன். அப்போது இது, நான் எதைப் பிடிக்கச் சொல்கிறேனோ, அதைப் பிடித்துக்கொண்டு வந்துவிடும். அவ்வளவு திறமையாக நாய்” என்று, அதைப் பற்றிப் பெருமையாகப் பேசிய வீட்டுக்காரர், தொடர்ந்து அவரிடம், “இந்த நாயைப் பற்றி இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்கிறேன்” என்றார்.
“அது என்ன செய்தி?” என்று வந்தவர் கேட்டபோது, “இது கோழிகளைக் கண்டால் அஞ்சி நடுங்கும்” என்றார் வீட்டுக்காரர். “இவ்வளவு பெரிய நாய் சாதாரண கோழிகளைக் கண்டால் அஞ்சுமா?” என்று வந்தவர் வியப்போடு கேட்டதற்கு, வீட்டுக்காரர், “சிறு வயதில் இது கோழிகளோடு வளர்ந்தது. அப்போது அவை இதனை அடிக்கடி கொத்தும். அதனால் இது அவைகளைக் கண்டாலே அஞ்சி ஓடும். வளர்ந்த பின்னும் இதற்கு அந்த அச்சம் போகவே இல்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
வேடிக்கையான நிகழ்வுதான் என்றாலும், இந்த நிகழ்வில் வருகின்ற வேட்டை நாயைப் போன்றுதான் நாம், சாத்தானின் பிடியிலிருந்தபோது எப்படி அஞ்சி அஞ்சி வாழ்ந்தோமோ, அப்படி ஆண்டவரால் மீட்கப்பட்ட பிறகும் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை யாருக்கும் அஞ்ச வேண்டாம். ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே அஞ்சினால் போதும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்றால் நமக்குள் ஒருவிதமான அச்சம் வந்துவிடுகின்றது. இயேசுவின் சீடர்களுக்கும் இதே மாதிரியமான அச்சம் இருந்தது. அதனால்தான் இயேசு அவர்களிடம், உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். கொன்றபின் நரகத்தில் தள்ள வல்லவருக்கே அஞ்சுங்கள் என்கிறார்
உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்று சொல்லும் இயேசு, அதற்கான காரணத்தையும் சொல்கின்றார். சிட்டுக் குருவிகளுக்கு மதிப்பில்லை. ஆனாலும்கூட கடவுளால் அவை மறக்கப்படுவதில்லை. அப்படியிருக்கையில், படைப்பின் சிகரமாக இருக்கும் மனிதர்களை மட்டும் கடவுள் எப்படி மறப்பார்? அதனால் அஞ்சாதீர்கள் என்று இயேசு தம் சீடர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றார்.
இன்றைய முதல் வாசத்தில் பவுல், நாம் உரிமைப் பேற்றினைப் பெற கடவுளால் கிறிஸ்து வழியாக முன்குறிக்கப்பட்டுள்ளோம் என்கிறார். இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்கின்றவர்கள் உரிமைப் பேற்றினைப் பெற்றுக்கொள்கின்றார். அவர்கள் கடவுளால் முன் குறிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய பேற்றினைப் பெற போகிறவர்கள் எதற்காக அஞ்ச வேண்டும்? என்பதைப் பவுல் சொல்லாமல் சொல்கின்றார்.
எனவே, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழும் நாம் யாருக்கும் அஞ்சாமல் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 கடவுளின் பார்வையில் யாவரும் மதிப்பு மிக்கவர்கள். அதனால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.
 கடவுள் நம்மைக் கண்ணின் மனியாய்க் காக்கும்போது, எதற்கு அஞ்ச வேண்டும்?
 ஆண்டவர் தம் மக்களோடு என்றும் உடனிருக்கின்றார். அதனால் அஞ்ச வேண்டாம்.
இறைவாக்கு:
‘அஞ்சாதே, நான் உன்னுடன இருக்கின்றேன்’ (எசா 41:10) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.