நூர்-சுல்தான் சுதந்திர மாளிகையும் உலக மதங்களும்

திருச்சிலுவையின் மகிமையை சிறப்பிக்கும் திருவிழா. அந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கஜகஸ்தானுக்கான திருப்பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் உள்ளூர் நேரம் காலை 9.40க்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் காலை 9.10 மணிக்குத் துவங்கின. தன் திருப்பயணத்தின் முதல் நாளான செவ்வாய் இரவு நூர்-சுல்தான் நகரின் திருப்பீடத்தூதரகத்தில் ஓய்வெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் காலை அத்திருப்பீடத்தூதரகத்திலிருந்து 4.3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுதந்திர மாளிகை நோக்கி காரில் பயணமானார். தலைநகர் நூர்-சுல்தானிலுள்ள இந்த மாளிகை 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டு, 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவுற்றதாகும். இதன் உட்பகுதி 40,000 சதுர மீட்டர் கொண்டதாகும். அரசுத் தொடர்பான முக்கிய விழாக்கள் இந்த மாளிகையில்தான் இடம்பெறுகின்றன.

நீல நிறக் காண்ணாடியின் மேல் வெள்ளைநிற குழாய்களின் வலைப்பின்னல் அமைத்தது போல் இதன் வெளிப்புறம் காட்சி அளிப்பது காண்பவர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இதன் கலைவடிவமும் கஜகஸ்தான் நாட்டு மக்களின் இரசனையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் பாராளுமன்ற பேரவைத் தலைவர்களின் கூட்டம் 2019ம் ஆண்டில் இங்கு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அரசுத்தலைவர் Nursultan Nazarbayev அவர்கள் 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பதவியேற்றதும், தற்போதைய அரசுத்தலைவர் Kassym-Jomart Tokayev அவர்கள் 2019ம் ஆண்டுப் பதவியேற்றதும் இந்தச் சுதந்திர மாளிகையில்தான்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணங்களின் முக்கிய நோக்கம் என்பது அந்தந்த நாடுகளின் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே என்கின்றபோதிலும், இப்பயணத்தில் உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் ஏழாவது கருத்தரங்கில் பங்குபெறுவதுமாகும். பெருந்தொற்றுக்குப் பின்னான இக்காலக்கட்டத்தில் மதங்கள் எவ்வாறு மக்களின் சமுதாய, மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் பங்காற்ற முடியும் என்பதை நோக்கமாகக்கொண்ட இந்த உலக கருத்தரங்கில் பங்கெடுப்பதை முக்கியமாகக் கருதுகிறார், உலக அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தக் கருத்தரங்கு 2003ம் ஆண்டு செப்டமபர் 23 மற்றும் 24 தேதிகளில் முதன் முதலாக அந்நாட்களில் அஸ்தானா என அழைக்கப்பட்ட இதே நூர்-சுல்தான் நகரில்தான் இடம்பெற்றது. கஜகஸ்தான் நாட்டின் முதல் அரசுத்தலைவர் Nursultan Abishevich Nazarbayev என்பவரால் அது துவக்கி வைக்கப்பட்டது. மதங்களிடையே இணக்கவாழ்வையும், ஒத்துழைப்பையும் உருவாக்கும் நோக்கத்துடன் உலகின் அனைத்து முக்கிய மதங்களும் கலந்து கொண்ட 2003ம் ஆண்டின் இந்தக் கருத்தரங்கு உலக மதங்களின் தனித்துவமான, முதல் கூட்டமாக இருந்தது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து மதப்பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் 2006, 2009, 2012, 2015, 2018 எனக் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. 2021ம் ஆண்டு இடம்பெறவேண்டிய உலகக் கருத்தரங்கு, கோவிட் பிரச்சனை காரணமாக இவ்வாண்டிற்குத் தள்ளிப்போடப்பட்டு, தற்போது நூர்-சுல்தானில் இடம்பெற்றுவருகிறது

Comments are closed.