இளையோர், மரியா போன்று விரைந்துசென்று பிறருக்கு உதவ வேண்டும்

மற்றவருக்கு உதவிசெய்ய விரைந்து சென்ற அன்னை மரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறும், வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்குமாறும், உலக இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டபின்னர், 2023ஆம் ஆண்டில், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் நடைபெறவிருக்கும் 37வது உலக இளையோர் நாளுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மூன்றாவது செய்தி, செப்டம்பர் 12, இத்திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்.1:38). என்ற தலைப்பில் 2019ஆம் ஆண்டில் பானமாவில் உலக இளையோர் நாள் நடைபெற்றதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, அந்நிகழ்வுக்குப்பின், புறப்படு என்ற அறைகூவலோடு 2023ஆம் ஆண்டில், லிஸ்பனை நோக்கி நம் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உலக இளையோர் நாள் செய்தியில் பல்வேறு தலைப்புக்களில் சிந்தித்தோம், அவற்றில் “புறப்படு” என்ற சொல்லே பொதுவானதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “மரியா புறப்பட்டு ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக்.1:39) என்ற 37வது உலக இளையோர் நாள் கருப்பொருள், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழும்பி, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வு குறித்து விழிப்பாயிருக்க அழைப்புவிடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று, மற்றும், போரின் துயர்நிறைந்த இந்நாள்களில், மரியா போன்று, அனைவரும், குறிப்பாக, இளையோர், அடுத்திருப்பவரைச் சந்திப்பதற்குப் புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, பல இளையோருக்கு, 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் லிஸ்பனில் கிடைக்கும் அனுபவம், அவர்களுக்கும், மனித சமுதாயம் முழுவதற்கும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.