இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 40:8-ல்,
“என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.” என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் திட்டம் நிறைவேற நாம் நம்மையே முழுமையாக ஆண்டவரிடத்தில் ஒப்படைக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்” என நூற்றுவத் தலைவன் இயேசுவைக் குறித்து கூறியதை நாம் கண்டோம்.
நூற்றுவத் தலைவன் இயேசு மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையை நாமும் கொண்டிருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்று திருச்சபை அதி தூய மரியாளின் புனிதப் பெயரைக் கொண்டாடுகிறது. இயேசுவின் திருநாமத்தைப் போல அன்னை மரியாளின் திருநாமம் வல்லமை நிறைந்தது. ஆற்றல் மிக்கது.
நாம் அன்னை மரியாளின் திருநாமத்தை நம்பிக்கைக்யோடு உச்சரித்து அலகையினை விரட்ட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.