செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம்

ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
அக்காலத்தில்
இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.
ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
1 கொரிந்தியர் 7: 25-31
“திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்”
நிகழ்வு
ஸ்பெயின் நாட்டில் பிறந்து, தோமிக்கன் சபையில் சேர்ந்து, பின்னாளில் புனிதராக உயர்த்தப்பட்டவர் புனித வின்சென்ட் ஃபெரர் (1350-1419). ஒருநாள் இவரிடம் ஒரு பெண்மணி வந்தார். அவர் இவரிடம், “என்னுடைய கணவர் எப்பொழுதும் என்மேல் எரிந்து எரிந்து விழுகின்றார். என்னிடம் அவர் சரியாகவே பேசுவதில்லை. இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு தாருங்கள்” என்றார்.
உடனே வின்சென்ட் ஃபெரர் அவரிடம், “ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருக்கின்றது. அந்தத் துறவுமடத்தின் வாசலில் ஒரு துறவி இருப்பார். நீங்கள் அவரிடத்தில் சென்று, ‘இந்தத் துறவுமடத்தில் கிணறு ஒன்று இருக்கின்றதாமே! அது எங்கே இருக்கின்றது?’ என்று கேளுங்கள். அவர் அந்தக் கிணற்றைச் சுட்டிக்காட்டுவார். அது சாதாரண கிணறு கிடையாது; அதிசயக் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து நீங்கள் தண்ணீர் மொண்டு கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்குச் சிறிதுநேரத்திற்கு முன்பு, கிணற்றிலிருந்து மொண்டுசென்ற தண்ணீரை, உங்கள் வாயிற் ஊற்றிக்கொண்டு, அதை விழுங்கிவிடாமல் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இப்படியே சில நாள்களுக்குச் செய்து வாருங்கள். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்தப் பெண்மணியும் வின்சென்ட் ஃபெரர் தன்னிடத்தில் சொன்னதுபோன்று துறவுமடத்திலிருந்த ‘அதிசயக் கிணற்றிலிருந்து’ தண்ணீர்மொண்டு வந்து, அதைத் தன்னுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்கு முன்பாக, வாயில் ஊற்றிக்கொண்டு பொறுமையாக இருந்தார். வேலையை முடித்துக்கொண்டு வந்த அந்தப் பெண்மணியின் கணவர், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்மீது எரிந்துவிழுந்தார். அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இப்படியே பல நாள்கள் தொடர்ந்தன.
இதனால் அந்தப் பெண்மணியின் கணவர், ‘இத்தனை நாள்களும் நான் என்னுடைய மனைவியைத் திட்டும்பொழுது, அவர் பதிலுக்கு என்னைத் திட்டுவார்! இப்பொழுது நான் அவரைத் திட்டும்பொழுதும் அவர் என்னைத் திட்டாமல், அமைதியாய் இருக்கின்றாரே! அப்படியானால் அவர் மனம்மாறியிருக்கவேண்டும்! என்னுடைய மனைவி என்னை மிகுதியாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டதால், நானும் அவரை மிகுதியாக அன்பு செய்வதுதான் முறை’ என்று அவர் தன் மனைவியை மிகுதியாக அன்பு செய்யத் தொடங்கினார். இதனால் அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியத் தொடங்கினார்.
தன் கணவர் இவ்வளவு சீக்கிரம் மாறுவார் என்பதைக் கனவிலும் எதிர்பார்த்திராத அந்தப் பெண்மணி, ‘எல்லாவற்றும் காரணம் அற்புதக் கிணற்றிலிருந்து நான் குடித்த தண்ணீர்தான். இதற்கு வழிவகை செய்துதந்த வின்சென்ட் ஃபெரருக்கு நன்றி சொல்லிவிட்டு வருவோம்’ என்று நினைத்துக்கொண்டு அவர் வின்சென்ட் ஃபெரரிடம் சென்று நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட வின்சென்ட் ஃபெரர் இறுதியாக அந்தப் பெண்மணியிடம், “நீங்கள் தண்ணீர் மொண்டு பருகினீர்களே! அது ஒன்றும் அதிசயத் தண்ணீர் கிடையாது; சாதாரண தண்ணீர்தான். உங்களுடைய கணவர் உங்களைத் திட்டும்பொழுது, உங்களுடைய வாயில் தண்ணீர் இருந்ததால், பதிலுக்கு நீங்கள் அவரைத் திட்ட முடியவில்லை. அதனால்தான் உங்களுடைய கணவர் உங்களை அன்பு செய்யத் தொடங்கிவிட்டார்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற கணவனும் மனைவியும் தொடக்கத்தில் ஒருவரை ஒருவரை திட்டிக்கொண்டும், காயப்படுத்திக்கொண்டும் தங்களுடைய இல்லற வாழ்வையே இன்னல்கள் மிகுந்ததாக மாற்றிக்கொண்டதுபோல, இன்றைப் பல தம்பதியர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையோடு நல்ல புரிதல் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு, தங்களுடைய இல்லற வாழ்க்கையே இன்னல் மிகுந்ததாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், “திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்’ என்று சொல்கின்றாரே…! இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆட்சியாளர்களிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வரும் இன்னல்கள் முன்னிட்டு அறிவுரை
இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், “மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது… திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்” என்று சொல்கின்றாரே, அப்படியானால் திருமணமே யாரும் செய்துகொள்ளக்கூடாதா…? திருமணத்தைக் கடவுள் புனிதப்படுத்தியது என்னாயிற்று…?’ போன்ற பல கேள்விகள் எழலாம். புனித பவுல் திருமணமே செய்துகொள்ளவேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, ஆட்சியாளர்களால் வரக்கூடிய துன்பங்கள் ஏறலாம். ஆகையால், மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது என்று குறிப்பிடுகின்றார்.
புனித பவுல் இவ்வார்த்தைகளை எழுதிய காலக்கட்டத்தில், உரோமையர்கள் கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். உரோமையர்களால் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றொரு நிலையிருந்தது. இதனால் கிறிஸ்தவர்கள் தாங்கள் இருக்கக்கூடிய நிலையிலேயே இருப்பது நல்லது என்றும், திருமண வாழ்வில் ஈடுபட்டிருப்போர் இவ்வுலகுக்குரியவற்றை நாடினால் இன்னல்தான் ஏற்படும்; அதனால் மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
புனித பவுலைப் பொறுத்தளவில், மணமாகாதவரும் சரி, மணமானவரும் சரி, அவர்கள் இவ்வுலகுக்குரியவற்றை நாடாமல், மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்காகத்தான் அவர் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றார். ஆகையால், நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலையில் இருந்துகொண்டு, கடவுளுக்கு உகந்தவற்றை நாடி, அவருக்கு உரிய மக்களாவோம்.
சிந்தனை
‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்’ (கொலோ 3:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளால் நம்முடைய வாழ்வை இழந்துவிடாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றை நாடி, நம் வாழ்வைக் காத்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.