கீவ் நகருக்கு இப்போதைக்குச் செல்ல இயலாது

உக்ரைன் நாட்டு கீவ் நகருக்கோ, இரஷ்யாவுக்கோ தற்போது திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதை மருத்துவர்கள் தடைசெய்துள்ளனர் என்று, செப்டம்பர் 05, இத்திங்கள் மாலை ஒளிபரப்பப்படும் போர்த்துக்கல் நாட்டு TVI/CNN தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எனினும், உக்ரைன் அரசுத்தலைவர் வொலாடுமிர் செலன்ஸ்கி, இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின்  ஆகிய இருவரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டு, உக்ரைனில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலக்கூடிய அனைத்து முறைகளிலும் முயற்சிசெய்து வருகிறேன் என திருத்தந்தை அப்பேட்டியில் கூறியுள்ளார்.

உக்ரைன், மற்றும் இரஷ்யாவுக்குச் செல்ல ஆவல் உள்ளது, அது எப்போது நடக்கும் என்பது இதுவரை தெரியாது, போரை முடிவுக்கு கொணர்வது குறித்து அவ்விரு நாடுகளின் அரசுத்தலைவர்களோடு தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் எனவும், இப்போரை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை சற்று கடினமாகவே உள்ளது எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கனடாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், முழங்கால் வலி சிறிது உணரப்பட்டதால், மருத்துவர்கள் இப்போதைக்கு அவ்விரு நாடுகளுக்கும் செல்வதைத் தடைசெய்துள்ளனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எனினும், இம்மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கஜகஸ்தான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Comments are closed.