செப்டம்பர் 6 : நற்செய்தி வாசகம்

கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.
அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
1 கொரிந்தியர் 6: 1-11
“உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள், உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியவற்றவர்களாகி விட்டீர்களா?”
நிகழ்வு
ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவருடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்தவர், வளர்த்து வந்த கோழிகள் இவருடைய தோட்டத்திற்குள் புகுந்து, செடிகளையும் காய்கறிகளையும் நாசம் செய்துவந்தன. இதைப் பார்த்து விவசாயி விழி பிதுங்கி நின்றார்.
‘பக்கத்துக்கு வீட்டுக்காரர்…! அவரிடம் இந்தப் பிரச்சனையைச் சொல்லி சண்டை பிடித்தால் அது நிரந்தரப் பகையாகிவிடும்; அதன்பிறகு மனவருத்தத்தோடுதான் அவரோடு காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில் அவர் வளர்த்து வரும் கோழிகளை நம்முடைய தோட்டத்திற்குள் அனுமதித்தால், நமக்குத்தான் பேரிழப்பு ஏற்படும்! இதற்கு என்ன செய்வது…?” என்று விவசாயி தீவிரமாக யோசித்தார்.
அப்பொழுதுதான் இவருக்கு ஓர் அருமையான யோசனை வந்தது. அதன்படியே செய்துவிடலாம் என்று இவர் முடிவுசெய்து, அவ்வூரில் இருந்த ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று, கொஞ்சம் முட்டைகளை வாங்கி, அவற்றைப் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் எடுத்துக்கொண்டு போய், “நீங்கள் வளர்த்து வரும் கோழிகள் என்னுடைய காய்கறித் தோட்டத்திற்குள் முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிட்டன. நான் யாருடைய உடைமைக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவன். அதனால்தான் நான் உங்களுடைய கோழிகள் என்னுடைய தோட்டத்தில் இட்ட முட்டைகளை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கின்றேன்” என்றார்.
விவசாயி கொடுத்த கோழி முட்டைகளை நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், விவசாயிக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, அதன்பிறகு தன்னுடைய கோழிகள் விவசாயியின் காய்கறித் தோட்டத்திற்குள் போகாத வண்ணம் பார்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற விவசாயி, பக்கத்து வீட்டுக்காரரின் கோழிகள் தன்னுடைய தோட்டத்திற்குள் வந்து மேய்ந்தபொழுது, அதைப் பெரிய பிரச்சனையாக்காமல், முன்மதியோடு செயல்பட்டு, அந்தப் பிரச்சனைக்கு, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாமும்கூட பிறரோடு இருக்கும் வழக்குகளை முன்மதியோடும் நமக்குள்ளேயும் தீர்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, அதைப் பிறரிடத்தில் கொண்டு சென்று, பெரிய பிரச்சனையாக்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வும் இன்றைய முதல் வாசகமும் எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
வழக்குகளைப் பிற இனத்தாரிடம் கொண்டுசென்ற மக்கள்
இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனையைக் குறித்துப் பேசுகின்றார். அது என்னவெனில், தங்களுடைய ஏற்படும் வழக்குகளை தீர்த்துக்கொள்ள, இறைமக்களிடம் போகாமல், பிற இனத்தாரிடம் சென்றதாகும்.
இறைமக்கள், தங்களிடையே ஏற்படும் வழக்குகளை, சிக்கல்களை தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளாமல், பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது என்ன நடக்குமெனில், முதலாவதாக, இறைமக்களுடைய சூழல், அவர்களுடைய பின்புலத்தை அறியாத பிற இனத்தார் இறைமக்களுக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கமுடியாத நிலை ஏற்படும். இரண்டாவதாக, இறைமக்கள் தங்களுடைய வழக்குகளை பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது, பிரச்சனை மிகவும் பெரிதாகுமே ஒழிய, அது தீர்வதற்கான வழியில்லை. மூன்றாவதாக, இறைமக்கள் தங்களுடைய வழக்குகளைப் பிற இனத்தாரிடம் கொண்டு செல்கின்றபொழுது, அவர்கள் முதிர்ச்சி இல்லாதவர்கள், கிறிஸ்துவின் விழுமியங்களின்படி (மத் 5:39) நடக்கவில்லை என்பதையே காட்டும். இதனால் இறைமக்கள் தங்களிடைய ஏற்படும் வழக்குகளை தங்கள் நடுவில் இருக்கும் ஞானமுள்ளவர்களை நாடித் தீர்த்துக்கொள்ளச் சொல்கின்றார் புனித பவுல்.
கிறிஸ்துவின் வழியில் நடப்பவர்கள் தங்களுடைய மகத்துவத்தை உணரவேண்டும்
புனித பவுல், கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடையே ஏற்படும் வழக்குகளை, தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு மற்றுமொரு முக்கியமான காரணத்தை முன்மொழிகின்றார். அது என்னவெனில், ‘இறைமக்கள் உலகுக்குத் தீர்ப்பளிப்பவர்கள்’ என்பதாகும். இது குறித்து திருவெளிப்பாடு நூல் 3:21 இல் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.” ஆம், சாத்தானை வெற்றி பெறும் ஒருவர், இயேசுவோடு அவருடைய அரியணையில் வீற்றிருக்கும் பேற்றினை பெறுகின்றார். அவ்வாறெனில் அவருக்கு, இவ்வுலகிற்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

Comments are closed.