சமூக, அரசியல் செயலற்றதன்மை சில பகுதிகளை தனிமைப்படுத்துகிறது

சிரியாவில் கள மருத்துவமனைகள் திட்டம்” என்ற பெயரில் அந்நாட்டில் துயருறும் மக்களுக்கு நலவாழ்வு உதவிகளை ஆற்றிவரும் AVSI மனிதாபிமான அமைப்பினருக்கு   தன் நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 3, இச்சனிக்கிழமையன்று அவ்வமைப்பின் ஏறத்தாழ 150 உறுப்பினர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, “உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? ” (2:13) என்ற புலம்பல் நூல் வார்த்தைகளே, சிரியாவை நினைக்கும்போது மனதில் எழுகின்றன என்று கூறியுள்ளார்.

தன் தோள்களில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவனைச் சுமக்கும் தந்தையின் புகைப்படம் ஒன்றை அண்மையில் கலைஞர் ஒருவர் தன்னிடம் கொடுத்தபோது அதைப் பார்த்து மிகவும் கவலையடைந்தேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்புகைப்படம், கடந்த 12 ஆண்டுகால வன்முறைத் தாக்குதல்களால் சிரியா மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை நினைவுபடுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

அழிவு, அதிகரித்துவரும் மனிதாபிமானத் தேவைகள், சமூக மற்றும், பொருளாதாரச் சரிவு, ஏழ்மை, பசி பட்டினி போன்றவற்றில் உலகில் மிக அதிகமாகத் துன்புறும் நாடுகளில் ஒன்றாக சிரியா உள்ளது என, பன்னாட்டு ஆய்வாளர்கள் நமக்குக் கூறுகின்றனர் என்று கூறியுள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

Comments are closed.