பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிறு (04-09-2022)

I சாலமோனின் ஞானம் 9: 13-18
II பிலமோன் 9b-10, 12-17
III லூக்கா 14: 25-33
சீடத்துவமும் சிலுவையும்
திரும்பிப் பார்க்க மாட்டேன்:
மேகாலயாவில் கரோ (Garo) என்றோர் இனக்குழுவினர் உண்டு. இவர்கள் நடுவில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜரோப்பியக் கண்டத்திலிருந்து சிலர் நற்செய்தி அறிவிக்க வந்தனர். தொடக்கத்தில் இந்த இனக்குழுவில் இருந்த யாவரும் நற்செய்தியைக் கேட்கத் தயாராக இல்லை. பெரிய போராட்டத்திற்குப் பிறகே இந்த இனக்குழுவில் இருந்த ஒரு குடும்பம் நற்செய்தியை ஏற்றுக் கொண்டது. அந்தக் குடும்பத்தில் இருந்தவர்களைத் தொடர்ந்து பலரும் நற்செய்தியை ஏற்றுக் கொண்டார்கள்.
இதைத் தாங்கிக்கொள்ள முடியாத இனக்குழுத் தலைவர் முதலில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மனிதருடைய இரண்டு மகன்களை ஊரிலிருந்த ஒரு பொதுவான இடத்தில் நிறுத்தி வைத்து அவரிடம், “நீர் கிறிஸ்துவை மறுதலிக்காவிட்டால் உன் மகன்கள் இவர்கள் இருவரையும் அம்பெய்த்து கொல்வேன்” என்று மிரட்டினார். அதற்கு அந்த மனிதர், “இயேசுவின் பின்னால் நானும் செல்வேன், திரும்பிப் பார்க்க மாட்டேன்” என்றார். இதனால் இனக்குழு தலைவர் அந்த மனிதருடைய இரண்டு மகன்களையும் அம்பெய்து கொன்றார்.
பின்னர் இனக்குழு தலைவர் அந்த மனிதருடைய மனைவியை அதே இடத்தில் நிறுத்தி, வைத்து அவரிடம், “இப்போதாவது நீ கிறிஸ்துவை மறுதலி, இல்லையென்றால் உன் இரு மகன்களைப் போன்று உன் மனைவியையும் அம்பெயது கொன்றுபோடுவேன்” என்று எச்சரித்தார். அப்போதும் அந்த மனிதர், “இயேசுவின் பின்னால் நானும் செல்வேன். திரும்பிப் பார்க்கமாட்டேன்” என்றார். இதனால் இனக்குழுத் தலைவர் அந்த மனிதருடைய மனைவியின்மீதும் அம்பெய்து கொன்று போட்டார்.
தன் இரண்டு மகன்கள், அவர்களைத் தொடர்ந்து தன் மனைவியை இழந்தபோதும் தன் முடிவிலிருந்து அந்த மனிதர் சிறிதும் பின்வாங்காததைப் பார்த்த இனக்குழுத் தலைவர், ‘ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயேசுவுக்காக இவர் தன் மகன்கள், மனைவி; ஏன், தன்னுடைய உயிரையும் இழக்கக் துணிகிறார் என்றால் அவர் மிகப்பெரியவர்’ என்று இனக்குழுத் தலைவர் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டார். இனக்குழுத் தலைவர் இயேசுவை ஏற்றுக் கொண்டதைப் பார்த்துவிட்டு, அந்த இனக்குழுவில் இருந்த எல்லாரும் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டார்கள்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் கரோ இனத்தில் இயேசுவை முதலாவதாக ஏற்றுக்கொண்ட மனிதர் அவருக்காகத் தன் இரு பிள்ளைகள், மனைவி; ஏன், தன் உயிரையும் இழக்கத் துணிந்தார். இவ்வாறு அவர் இயேசுவின் உண்மையான சீடராக விளங்கினார். பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை இயேசுவின் உண்மையான சீடராக வாழ நமக்கு அழைப்புத் தருகிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இயேசுவுக்கே முதன்மையான இடம்:
எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இயேசுவுக்குத் தன்னைப் பின்தொடர்ந்து வரும் பலரும் தன்னை உண்மையாய்ப் பின்தொடராமல், ஆதாயத்திற்காகவே பின்தொடர்ந்து வருகிறார்கள் (யோவா 6:26) என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் அவர் தன்னை உண்மையாய்ப் பின்தொடர்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று, மூன்று முதன்மையான நிபந்தனைகளை முன்வைக்கின்றார். முதலாதாக, மற்ற எல்லாரையும்விட; ஏன், தம் உயிரையும் விட ஒருவர் தனக்கு முதன்மையான இடம் தர வேண்டும் என்கிறார் இயேசு. ஒருவரால் மற்ற எல்லாரையும் விட; ஏன் தம் உயிரையும் விட கடவுளுக்கு முதன்மையான இடம் தரமுடியுமா? என்றால் முடியும் என்று இயேசு நமக்கு முன்மாதிரி காட்டுகின்றார். அவர் தன் இரத்த உறவுகளைவிட இறையாட்சிக்கே முதன்மையான இடம் கொடுத்தார் என்பதை நற்செய்தியின்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் (மத் 12: 46-50).
இரண்டாவதாக, இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருபவர் தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு தன்னைப் பின்தொடர வேண்டும் என்கிறார். சிலுவை இல்லாமல் சீடத்துவ வாழ்வைத் கற்பனை செய்து பார்க்க முடியாது. இயேசு, இன்றைக்கு இருக்கும் அரசியல் மற்றும் ஒருசில சமயத் தலைவர்களைக் போன்று, ‘என் பின்னால் வந்தால் சொகுசான வாழ்க்கை வாழலாம்’ என்று பொய்யான, போலியான வாக்குறுதிகளை அள்ளி இரைக்கவில்லை. மாறாக, அவர் உண்மையையே பேசினார். ஆகவேதான் அவர் தன்னைப் பின்தொடர்பவர் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்கிறார். மட்டுமல்லாமல், தாமே சிலுவையைச் சுமந்து நமக்கு முன்மாதிரி காட்டுகின்றார்.
முன்றாவதாக, இயேசு தன்னைப் பின்தொடர்பவர் தம் உடைமையை எல்லாம் விட்டுவிட வேண்டும் என்கிறார். அவர் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், ஒருவரிடம் இருக்கும் உடைமை அல்லது சொல்வம் அவரைத் தன்மீது மட்டுமே அக்கறை கொள்ளச் செய்யுமே ஒழிய, அவரை அடுத்திருப்பவரைப் பற்றி அக்கறை கொள்ளச் செய்யாது. இயேசு சொல்லும் அறிவற்ற செல்வந்தன் உவமையும் (லூக் 12: 13-21), அவரைப் பின்தொடர விரும்பிய செல்வரான இளைஞனும் (மத் 19: 16-22) இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். இங்கே புனித பவுல் சொல்கின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்” (2 கொரி 8:9) என்று புனித கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறும் வார்த்தைகள், இயேசுவே தமது ‘செல்வத்தை’ விட்டுவிட்டு வந்ததால் அவரைப் பின்தொடர்பவர் தன் உடைமையை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வது மிகவும் முக்கியம்.
கடவுளின் திட்டத்தை அறிவது எளிதல்ல:
இயேசுவைப் பின்தொடர்பவர் எதற்கு எல்லாரையும்விட அவரை மேலாக அன்பு செய்ய வேண்டும்? சிலுவையைச் சுமக்க வேண்டும்? தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழலாம். ஊனியல்புடையவர்களால், அல்லது சாதாரண மனிதர்களால் இதை அறிந்து கொள்ள முடியாது.

Comments are closed.