செப்டம்பர் 2 : நற்செய்தி வாசகம்
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
1 கொரிந்தியர் 4: 1-5
“தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே”
நிகழ்வு
திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான், வெனிஸ் நகரில் ஆயராக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. இவர் இருந்த வெனிஸ் மறைமாவட்டத்தில் ஒரு பங்குப்பணியாளர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்ற செய்தி இவருக்குத் தெரிய வந்தது. உடனே இவர் தனது செயலரிடம், “வாருங்கள்! நாம் இருவரும் அந்தப் பங்குப் பணியாளரைப் பார்த்துவிட்டு வருவோம்” என்று சொல்லிவிட்டு, அவரைப் பார்ப்பதற்கு இருவரும் கிளம்பிப் போனார்கள்
இருவரும், குறிப்பிட்ட அந்தப் பங்குப் பணியாளரின் பங்கு எல்கையில் நுழைகையில் ஒரு பெரிய விடுதி இருப்பதைக் கண்டார்கள். அந்த விடுதிக்கு முன்பாக பங்குப் பணியாளரின் ஊர்தியானது நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆயர், தன் செயலரிடம், “பங்குப்பணியாளர் இங்குதான் இருக்கின்றார். அவரை அழைத்து வாருங்கள்” என்றார். செயலரும் ஆயரின் சொல்லுக்குப் பணிந்து, விடுதிக்குள் சென்று, பங்குப் பணியாளரைத் தேடித் பார்த்தார். அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார். உடனே ஆயரின் செயலர் அவரிடம் சென்று, “ஆயர் உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றார். அவரோ விழுந்தடிக்கொண்டு ஆயரிடம் ஓடி வந்தார்.
ஆயர் அந்தப் பங்குப் பணியாளரிடம், “வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டுங்கள்” என்று சொல்ல, அவரும் வண்டியைப் பங்கு இல்லத்திற்கு ஓட்டிக்கொண்டு சென்றார். போகிற வழியில் பங்குப் பணியாளர், ‘ஆயர் என்னைத் தேடி வந்திருக்கின்றார்… அவர் வந்த நேரம் பார்த்து, நான் குடித்துக் கொண்டிருந்திருக்கின்றேன்… இன்றைக்கு எனக்கு என்ன ஆகப் போகிறதோ…?’ என்று பதற்றத்தோடு சென்றார். அவரைத் தொடர்ந்து ஆயரும் அவருடைய செயலரும் தங்களது வண்டியில் சென்றார்கள்.
பங்குப் பணியாளர் பங்கு இல்லத்தை அடைந்ததும், ஆயர் பங்குப் பணியாளரிடம், “இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளவேண்டும்” என்றார். இதைக்கேட்டு அதிர்ந்தவராய் பங்குப் பணியாளர் ஆயரிடம், “ஆயரே! நீங்களா என்னிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள்…?” என்றார். “ஆமாம், நான்தான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறேன்” என்றார். பின்னர் அந்தப் பங்குப் பணியாளர் ஆயருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க, ஆயர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டுத் தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பினார்.
வரும் வழியில், நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஆயரின் செயலர் அவரிடம், “ஆயர்ப் பெருந்தகையே! குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பலருக்கு துன்மாதிரியாக இருக்கும் அந்தப் பங்குப் பணியாளரை நீங்கள் கண்டிப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்களோ அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டு வந்திருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு ஆயர் தன் செயலரிடம், “அவர் குடிகாரர்… பாவி என்று தீர்ப்பிடுவதற்கு நான் யார்…? கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லாதபொழுது, நான் அவரைத் தீர்ப்பிடுவது சரியாகுமா…? மேலும் நான் அவரிடம் ஒப்புரம் அருளடையாளம் மேற்கொண்டிருப்பதால், அவர் ‘ஆயரே என்னிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டுப் போயிருக்கின்றார் என்றால், நான் எப்படி இருக்கவேண்டும்…?’ என்று தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பார்” என்றார்.
ஆயர் தன்னுடைய செயலரிடம் சொன்னதுபோன்றே குடிக்கு அடிமையான அந்தப் பங்குப் பணியாளர் தனது வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஒருசிலர் மாதங்களிலேயே குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையானார்.
ஆம். திருத்தத்தை இருபத்து மூன்றாம் யோவான் ஆயராக இருந்தபொழுது, குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்த பங்குப் பணியாளரைத் தீர்ப்பிடவில்லை; மாறாக அவரை வேறொரு வழியில் நல்வழிக்குக் கொண்டு வந்தார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் யாரும் யாரையும் தீர்ப்பளிக்கக்கூடாது. ஏனெனில் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.
தீர்ப்பு வழங்குபவர் மனிதர் அல்ல; ஆண்டவர்
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், கிறிஸ்துவின் ஊழியர்களாக இருந்து, கடவுளின் மறை உண்மையை அறிவித்த பவுல், அப்பொல்லோ, கேபா ஆகியோரைத் தீர்ப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை எழுதுகின்றார்.
“என்னைப் பற்றி மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன்” என்று சொல்லும் புனித பவுல், “எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே” என்கின்றார். ஆண்டவருக்குத்தான் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருப்பதால், யாருக்கும் யாரையும் தீர்ப்பளிப்பதற்கு அதிகாரம் கிடையாது. இந்த உண்மையைத்தான் பவுல் கொரிந்து நகரில் இருந்த மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கின்றபொழுது, நாம் அடுத்தவரை எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பிடுவது தகுமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்’ (மத் 7: 1) என்பார் இயேசு. ஆகையால், நாம் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடுத்தவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு, அவற்றைப் பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.