வாசக மறையுரை (ஆகஸ்ட் 20)

பொதுக் காலத்தின் இருபதாம் வாரம்
சனிக்கிழமை
I எசேக்கியேல் 43: 1-7a
II மத்தேயு 23: 1-12
“தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்”
வெள்ளப் பெருக்கும், நீர் நொச்சி மரங்களும்:
ஒரு நாள் கடலுக்கு இப்படியொரு யோசனை வந்தது: “ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது அது ஆலமரம், அரசமரம் என்றெல்லாம் என்னிடம் இழுத்துக் கொண்டு வருகின்றது. நீர் நொச்சி மரத்தை மட்டும் ஏன் அது என்னிடம் இழுத்துக் கொண்டு வருவதில்லை?”
கடல் எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்தும் அதற்குக் காரணம் புரியவில்லை. அதனால் அது ஆறிடம் நேரடியாகவே கேட்டது.
“ஆல மரமும் அரசமரமும் இன்ன பிற மரங்களும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள், வலிமை வாய்ந்தவர்கள் என்று தலையை உயர்த்திகொண்டு நிற்கும். அதனால் நான் அவற்றை இழுத்துக்கொண்டு வந்துவிடுவேன். நீர் நொச்சி மரங்கள் அப்படி இல்லை. நான் வேகமாக வருகின்றபோது அவை மிகுந்த தாழ்ச்சியுடன் தலையைத் தாழ்த்திக் கொள்ளும். இதனால் அவற்றை என்னால் ஒன்று செய்ய முடியவில்லை” என்று பொறுமையாக விளக்கம் தந்தது ஆறு.
இப்போது ஏன் நீர் நொச்சி மரங்கள் தன்னிடம் இழுத்து வரப்பாடுவதில்லை என்ற காரணம் புரிந்தது கடலுக்கு.
ஆம், தாழ்ச்சி உடையவர் வீழ்ச்சி அடைவதில்லை; மாறாக, அவர்கள் எல்லாவிதமான ஆசிகளையும் பெறுவார்கள். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்தியம்புகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மக்கள் தங்களைப் பார்க்க வேண்டும், புகழ்வேண்டும், மரியாதை செலுத்தவேண்டும் என்று விரும்பினார்கள். இவையெல்லாவற்றையும் விட அவர்கள் மக்களின் தோள்மேல் சட்டங்கள் என்ற பழுவான சுமைகளை இறக்கி வைத்தார்கள். இப்படியெல்லாம் அவர்கள் நடந்துகொண்டதற்குக் காரணம், அவர்கள் உள்ளத்தில் இருந்த ஆணவமே. அதனால் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், “தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர்” என்கிறார்.
தொடர்ந்து இயேசு கூறுகின்றபோது, “தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்” என்கிறார். தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிற ஒருவர் எப்படி உயர்த்தப்பெறுவர் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது இன்றைய முதல் வாசகம்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் மாட்சி கிழக்கிலிருந்து வந்து, கோயிலை நிரப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். மக்கள் பிற தெய்வங்களை வழிபட்டு, கடவுளுக்கு முன்பு தங்களை உயர்த்திக்கொண்டதால், கடவுளின் மாட்சி கோயிலை விட்டுக் கிழக்குப் பக்கமாகச் சென்றது (எசே 8-11). இப்போது மக்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து, கடவுளுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்திக் கொண்டதால், கடவுளின் மாட்சி எந்த வழியாக வெளியே சென்றதோ, அந்த வழியாக உள்ளே நுழைகின்றது. இது கடவுளுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது அவரது மாட்சியும் அவரது அருளும் நம்மைச் சூழும் என்ற உண்மையை நமக்கு உரக்கச் சொல்கிறது.
அதனால் நாம் கடவுளின் ஆசியைப் பெற, அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம்.
சிந்தனைக்கு:
எங்கே தாழ்ச்சி உண்டே, அங்கே வீழ்ச்சி என்பது கிடையாது.
கடவுள் தன்மையில் விளங்கிய இயேசு, நம்மை மீட்கத் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்தார் என்பதை மறக்க வேண்டாம்.
வானதூதர் சாத்தானாய் ஆனது தாழ்ச்சியின்மையினால்தான்
இறைவாக்கு:
‘உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?’ (மீக் 6:8) என்பார் இறைவாக்கினர் மீக்கா. எனவே, நாம் ஆண்டவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொண்டு, தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.