உண்மையான அதிகாரம் பணிபுரிவதில் உள்ளது
“மகிமையடைந்துள்ள இறைவனின் அன்னையை நோக்கும்போது, உண்மையான அதிகாரம் பணிபுரிவதில் இருக்கின்றது என்பதையும், ஆட்சிபுரிதல் என்பது, அன்புகூர்வதாகும், மற்றும், இதுவே விண்ணகம் செல்லும் பாதையாகும் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15, இத்திங்களன்று கூறியுள்ளார்.
அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15, இத்திங்களன்று விண்ணேற்பு (#Assumption) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அருள்மிகப் பெற்ற மரியாவுக்கு தங்க செபமாலை
மேலும், தொமினிக்கன் குடியரசில் Altagracia அதாவது அருள்மிகப் பெற்ற மரியா முடிசூட்டப்பட்டதன் நூறாம் யூபிலி ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாக அந்நாடு சென்றுள்ள பேராயர் Edgar Peña Parra அவர்கள், தங்கச் செபமாலை ஒன்றை, திருத்தந்தையின் அன்பளிப்பாக அவ்வன்னையின் காலடிகளில் அர்ப்பணித்தார்.
தொமினிக்கன் குடியரசின் மக்கள் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களின் அன்னையும், பாதுகாவலருமான அருள்மிகப் பெற்ற அன்னை மரியாவுக்கு, தங்க செபமாலை ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 15, இத்திங்களன்று அந்நாட்டின் ஒலிம்பிக் அரங்கத்தில், ஆயர்கள் அருள்பணியாளர்கள் என, ஏறக்குறைய 700 பேருடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி, இப்பெருவிழாவை நிறைவு செய்தார், திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத் துறையின் நேரடிச் செயலர் பேராயர் Peña Parra.
இத்திங்கள் அதிகாலையில், தொமினிக்கன் குடியரசின் Higüey நகரிலுள்ள அருள்மிகப் பெற்ற அன்னை மரியா திருத்தலத்தில், அரசு அதிகாரிகளும் குடிமக்களும் அன்னை மரியாவிடம் தங்களின் நாட்டுப்பற்று உறுதிமொழியைப் புதுப்பித்தனர்.
Comments are closed.