இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
புனித மகதலா மரியாவின் விழாவினைக் கொண்டாடும் நாம், அவரைப் போல ஆண்டவரிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவராக இருப்போம். ஆண்டவர் இயேசுவோடு இறுதிவரை நின்ற மகதலா மரியாவைப் போல நாமும் நன்றியுள்ளவர்களாக விளங்கிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
தூய மகதலா மரியா எப்போதும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக முதன்முதலாக கடவுளைத் தேடினார். இயேசுவின் மற்ற சீடர்களெல்லாம் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க மகதலா மரியாதான் முதலில் கல்லறைக்கு வந்தவர். இப்படி முந்தமுந்த இயேசுவைத் தேடியதால்தான், உயிர்த்த இயேசுவை முதல்முறையாகக் காணும் பேறுபெறுகின்றார்.
நாமும் மகதலா மரியாளைப் போல எல்லாவற்றையும் விட, எல்லோரையும் விட இறைவனுக்கு முதலிடம் அளிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தற்போது இந்தியாவிலும், சில நாடுகளிலும் மறுபடியும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.