ஜூலை 14 : நற்செய்தி வாசகம்
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30
அக்காலத்தில்
இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
“எல்லாரும் என்னிடம் வாருங்கள்”
பொதுக் காலத்தின் பதினைந்தாம் வாரம் வியாழக்கிழமை
I எசாயா 26: 7-9, 12, 16-19
II மத்தேயு 11: 28-30
“எல்லாரும் என்னிடம் வாருங்கள்”
என்னிடம் வாருங்கள்:
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விடுமுறை நாளில் ஒரு குடும்பம் கடற்கரைக்குச் சென்றது. கடற்கரையில் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலழித்தது அந்தக் குடும்பம்.
“வீட்டிற்குத் திரும்பலாம்; நேரம் ஆகிவிட்டது” என்று அந்தக் குடும்பத்தில் இருந்த தந்தை சொன்னபோது, மகன் அவரிடம், “அப்பா! சிறிதுநேரம் கடலில் குளித்துக் கொள்ளட்டுமா?” என்றான். ஒருசில வினாடிகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்த தந்தை, “சரி, நீ கடலில் குளிக்கலாம்; ஆனால், உனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக உன்னோடு சேர்ந்து நானும் குளிக்க வருகிறேன்” என்றார்.
தன் தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்ட மகனுக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்தது. இதையடுத்து, இருவரும் கடலுக்குள் இறங்கிக் குளிக்கத் தொடங்கினர். மகிழ்ச்சியாக இருவரும் குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென பெரிய அலைகள் ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என அவர்களைத் தாக்க இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
நல்லவேளை! தந்தை தன் மகனை இறுகப் பிடித்திருந்ததால் இருவரும் சேர்ந்தே கடவுளுக்குள் சென்றார்கள். இதற்கு நடுவில் தந்தை அலையை எதிர்த்துக் கரைக்கு வர முயன்றபோதும், அவரும் அவரது மகனும் மீண்டும் மீண்டுமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையெல்லாம் அருகில் இருந்த மணற்திட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவர்கள் இருவரையும் பார்த்து, “என்னிடம் வாருங்கள்! வாருங்கள்!” என்று கத்தினார். அவர்களும் அவரிடம் செல்லவே அவர் அவர்களைக் காப்பாற்றி, அலைகள் ஓய்ந்த பின், கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் பெரியவர் தன்னிடம் வந்த தந்தையையும் மகனையும் காப்பாற்றினர். இன்றைய நற்செய்தியில் இயேசு, “எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் ஆண்டாண்டு காலமாக எகிப்தியர்கள், அவர்களைத் தொடர்ந்து அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், இறுதியாக உரோமையர்கள் என பலருக்கும் அடிமைகளாய் இருந்தார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கையே துன்பங்கள் நிறைந்தனவாகவும் சுமைகள் நிறைந்தனவாகவும் ஆனது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கூட, மக்கள் கடவுளை நோக்கி, “துயரத்தில் உம்மைத் தேடினோம்” என்கிறார்கள். இது அவர்கள் எத்தகைய துயரினை அடைந்திருப்பார்கள் என்பதை எடுத்துக்கூறுகின்றது.
ஒரு பக்கம் அடிமை வாழ்வு யூதர்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தது என்றால், இன்னொரு பக்கம் சமயத் தலைவர்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சுமக்க முடியாத சுமைகளை மக்களின் தோள்மேல் வைத்தார்கள் (மத் 23:4). இதனால் அவர்களை வாழ்வே மிகவும் துன்பம் நிறைந்ததானது. இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவனவாக இருக்கின்றன. அன்று யூதர்களைப் போன்று, இன்று நாமும் பலவிதமான சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கலாம். எப்போது நாம் இளைப்பாறுதல் தரும் இயேசுவிடம் நம்பிக்கையோடு செல்கின்றோமோ, அப்போது அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார். எனவே, நாம் இயேசுவிடம் அடைக்கலம் புகுந்து, அவர் தரும் இளைப்பாறுதலைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
இயேசு தரும் இளைப்பாறுதலை இவ்வுலகில் உள்ள யாராலும் தர முடியாது.
இயேசுவிடமிருந்து நாம் பெறும் இளைப்பாறுதலை மற்றவருக்கும் வழங்குவோம்.
நாம் சுமைதாங்கியா? சுமையா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்’ (ஆமோ 5:6) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் நமக்கு இளைப்பாறுதல் தரும் ஆண்டவரைத் தேடிச் சென்று, இளைப்பாறுதலையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.