வாசக மறையுரை (ஜூலை 13)
பொதுக் காலத்தின் பதினைந்தாம் வாரம்
புதன்கிழமை
I எசாயா 10: 5-7, 13-16
II மத்தேயு 11: 25-27
அகந்தையும் அழிவும்
திரும்புங்கள்; முடிவு அண்மையில் உள்ளது
ஒருநாள் காலையில் அருள்பணியாளர் ஒருவர் கிளைக் கிராமத்தில் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிவிட்டுத் தனது இரு சக்கர வண்டியில் இல்லத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவரோடு அவரது உதவியாளரும் வண்டியில் வந்தார்.
இருவரும் திரும்பி வந்துகொண்டிருக்கையில் அவரது பங்கைச் சேர்ந்த ஒருசில இளைஞர்கள் குளக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவரைப் பார்த்ததும், “சுவாமி! இங்கு வாருங்கள்! நாம் மகிழ்ச்சியாக மீன்பிடித்துப் பொரித்துச் சாப்பிடலாம்” என்றார்கள். அவர்களது அன்புக் கட்டளைக்கு இணங்கி, அருள்பணியாளரும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அவர்களோடு சேர்ந்து மீன்பிடிக்கத் தொடங்கினார்.
சற்று நேரத்தில் அந்த வழியாக இளைஞன் ஒருவன் தன்னுடைய புத்தம் புதிய இரு சக்கர வண்டியில் வந்தான். அவன் சாலையோரத்தில் இருந்த பலகையில், “திரும்புங்கள்; முடிவு அண்மையில் உள்ளது” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதைப் பாத்தான். கீழே அருள்பணியாளர் நின்றுகொண்டிருப்பதையும் பார்த்தான். ‘இது அவருடைய வேலையாகத்தான் இருக்கும்’ என நினைத்துக் கொண்டு அவன், “உங்களது சமயத்தை இப்படியெல்லாமா பரப்புவது?’ என்று அவரைப் பார்த்துக் கத்திவிட்டு, வண்டியை வேகமாக ஓட்டினான்.
உண்மையில் அங்கே பால வேலை நடந்துகொண்டிருந்தது. பாலை வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள்தான் இவ்வாறு பொறித்து வைத்திருந்தார்கள். அது தெரியாமல் அருள்பணியாளர்தான் அதைப் பொறித்து வைத்திருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டு அவரைப் பார்த்துக் கத்திவிட்டுப் போனான் அவன்.
ஒருசில வினாடிகள் கழித்து பெரிய சத்தம் கேட்டது. உடனே சத்தம் வந்த திசையை நோக்கி அருள்பணியாளரும் அவரது உதவியாளரும் அவர்களோடு இருந்த இளைஞர்களும் பார்த்தபோது, வண்டியை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞன் கீழே விழுந்து கிடைந்தது தெரிந்தது. அப்போது அருள்பணியாளரோடு வந்திருந்த உதவியாளர், “அறிவிப்புப் பலகையில் பொறிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை மதித்து, வண்டியைத் திரும்பியிருந்தால் அவனுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது. திமிர்த்தனமாக வண்டியை ஓட்டிச் சென்றதால்தான் அவனுக்கு இப்படி நடந்திருக்கின்றது” என்கிறார்.
ஆம், பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்று திமிர்த்தனத்தோடும் ஆணவத்தோடும் நடந்து கொள்கின்றர்கள். கடைசியில் அவர்களது முடிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். இன்றைய இறைவார்த்தை ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும், தாழ்ச்சியோடு இருப்பவர்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
வழிதவறி அலைந்த இஸ்ரயேல் மக்களைக் கண்டித்துத் திருத்துவதற்கு ஆண்டவராகிய கடவுள் பயன்படுத்திய ஒரு தடிதான் அசீரிய நாடு. இந்த நாடானது கடவுளின் கையில் ஒரு கருவி என நினைத்துச் செயல்பட்டிருக்கவேண்டும்; ஆனால், எல்லாம் தன்னுடைய ஆற்றலால்தான் நடந்தது என அகங்காரத்தோடு இந்த நாடு செயல்படத் தொடங்கியது. இதனால் அது அழிவைச் சந்தித்தது.
நற்செய்தியில் இயேசு ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு இறைஞானத்தை வெளிப்படுத்தியதற்காகக் கடவுளைப் போற்றுகின்றார். இங்கே இயேசு குறிப்பிடும் குழந்தைகளை, ஆண்டவரையே நம்பி இருப்பவர்கள் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். ஆண்டவரை மட்டும் நம்பி இருக்கும் குழந்தைகள் உள்ளத்தில் அகங்காரம் இருப்பதில்லை தாழ்ச்சி மட்டுமே இருக்கும். அதனாலேயே ஆண்டவர் தனது ஞானத்தை அவர்களுக்கு வெளிபடுத்துகின்றார்.
ஆம், ஆண்டவரின் அருளும் இரக்கமும் ஞானமும் அவரை நம்பி வாழ்வோருக்கே கிடைக்கும். எனவே, நாம் அத்தகைய மனிதர்களாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவருக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று விண்ணகம். மற்றொன்று, தாழ்ச்சியுடையோரின் உள்ளம்.
பணிவு பெருகும் இடத்தில் பரமனின் அருளும் பெருகும்.
அகந்தை உள்ளவர் ஆண்டவரை இழக்கின்றார்.
Comments are closed.