ஜூன் 19 : நற்செய்தி வாசகம்

அனைவரும் வயிறார உண்டனர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17
அக்காலத்தில்
இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.
ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்”
கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் (2022)
I தொடக்க நூல் 14: 18-20
II 1 கொரிந்தியர் 11: 23-26
III லூக்கா 9: 11b-17
“இதை என் நினைவாகச் செய்யுங்கள்”
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மன்னர்:
ஒரு காலத்தில் பிற தெய்வத்தை வழிபட்டவர் விட்டிகைன்ட் (Wittekind). ஜெர்மனியில் உள்ள சாக்ஸனி என்ற மாகாணத்தின் மன்னராக இருந்த இவர், பிரான்ஸ் நாட்டை ஆண்ட சார்லஸ் என்ற மன்னரோடு போர்தொடுக்கச் சென்றார். அவ்வாறு போர்தொடுக்கச் சென்றபோது அவருக்குள், ‘இந்தப் பிரான்ஸ் நாட்டுப் படை எப்படிப் போரில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றது?’ என்ற எண்ணமானது எழுந்துகொண்டே இருந்தது.
பிரான்ஸ் நாட்டுப் படை பாளையம் இறங்கிய இடத்திற்குச் சற்றுத் தொலைவில் வந்தும், விட்டிகைன்டும் அவரோடு ஒருசிலரும் வழிபோக்கர்களைப் போன்று மாறுவேடம் பூண்டு, அவர்கள் இருந்த இடத்திற்குள் நுழைந்தார்கள். அன்றைய நாளில் உயிர்ப்புப் பெருவிழா. அதனால் அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்க, மன்னர் சார்லசும் அவரது படைவீரர்களும் பக்தியோடு அதில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். நற்கருணை வழங்கும் வேளையில், அருள்பணியாளர் ஒவ்வொருவருக்கும் நற்கருணையை வழங்கும்போது, மகிழ்ச்சியோடு அதை உட்கொண்டவர்களின் உள்ளத்திற்குள் இயேசு ஒளி வெள்ளத்தோடு செல்வதையும், ஏனோதானோவென்று நற்கருணையை வாங்கியவர்களின் உள்ளத்திற்குள் இயேசு வருத்தத்தோடு செல்வதையும் கண்டு விட்டிகைன்ட் வியந்துபோனார்.
இக்காட்சி அவருக்கு இரண்டு உண்மைகளை உணர்த்தியது. முதலாவதாக, பிரான்ஸ் நாட்டினரின் வெற்றிக்கு அவர்கள் உட்கொள்ளும் நற்கருணையே காரணம். இரண்டாவதாக, நற்கருணையைத் தகுதியில்லாமல் உட்கொள்வது இயேசுவுக்கு வருத்தத்தைத் தரும். இந்த உண்மைகளை நன்கு உணர்ந்த விட்டிகைன்ட் கிறிஸ்தவனார்.
ஆம், திருப்பலியில் நாம் உட்கொள்ளும் நற்கருணை, சாதாரண உணவு அல்ல, அது ஆற்றலையும் வாழ்வையும் அளிக்கின்ற உணவு. அதையே மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் என்ற விழாவைக் கொண்டாடுகின்றோம்.. இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
தன்னையே தந்த இயேசு கிறிஸ்து:
“நற்கருணை வழியாக மூவொரு கடவுள் தன்னையே உணவாகத் தருகின்றார்” என்பார் குப்பெர்டினோ நகர்ப் புனித யோசேப்பு. இது உண்மை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தூயகத்திற்குள் நுழையும் தலைமைக் குரு காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் பலியாக ஒப்புக்கொடுத்தார். இதை அவர் ஒவ்வோர் ஆண்டும் செய்துவந்தார். இயேசுவோ வெள்ளாட்டுக் கிடையை அல்ல, தன்னையே ஒரே ஒருமுறை பலியாக ஒப்புக்கொடுத்தார். இவ்வாறு அவர் நம்மைத் தூயவராக்கினார் (எபி 10:10). இயேசு தம்மைப் பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுத்தது மட்டுமல்லாமல், வாழ்வளிக்கும் உணவாகத் தந்தார். அதைக் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் தெளிவாக நாம் வாசிக்கின்றோம்.
“ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான உடல்” என்றார். அப்படியே கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” என்றார்” என்று பவுல் கூறுவதன் வழியாக இயேசு நமக்கு வாழ்வளிக்கும் உணவாகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் சலேம் அரசர் மெல்கிசெதேக்குவைப் பற்றி வாசிக்கின்றோம். அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவரும் கடவுளின் உன்னத அர்ச்சகரான இவர் அமைதியின் அரசர் என்றும், நீதியின் அரசர் என்றும் அழைக்கப்படுகின்றார். மேலும், திருப்பாடல் 110:4, எபிரேயர் 7: 17 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளை இவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குருவும் அரசருமான இயேசுவை நமக்கு நினைவுபடுத்துகின்றார். இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் வாழ்வளிக்கும் உணவாகத் தந்தார். அந்த அடிப்படையில், அவர் தம்மையே நமக்காகத் தந்தார்.
உணவளிக்கும் இயேசு:
இயேசு தம்மையே நமக்கு வாழ்வளிக்கும் உணவாகத் தந்தது அவரின் அன்பின் ஒரு பரிமாணம் எனில், பசியோடு இருந்த மக்களுக்கு உணவளித்தது அவரது அன்பின் இன்னொரு பரிமாணம் ஆகும். இயேசுவின் பாடுகள், உயிர்ப்பு தவிர்த்து நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறும் ஒரே அரும் அடையாளம். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததுதான் (மத் 14: 15-21; மாற் 6: 35-44; யோவா 6: 4-13). இயேசுவின் சீடர்கள் அவரைத் தேடிவந்த மக்களை அனுப்ப முயன்றபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அன்று சீடர்களுக்கும், இன்று நமக்கும் இருக்க வேண்டிய சமூகக் கடமையை உணர்த்துகின்றது. இயேசுதான் மக்களுக்கு உணவு வழங்கினார் என்றாலும், அதைச் சீடர்கள் வழியாக அவர் வழங்கியது, அவரது சீடராக இருக்கும் ஒவ்வொருவரும் பசியோடு இருக்கின்ற ஏழைகளுக்கு உணவளித்து, வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.

Comments are closed.