வாசக மறையுரை (ஜூன் 18)
பொதுக் காலத்தின் பதினொன்றாம் வாரம்
சனிக்கிழமை
I 2 குறிப்பேடு 24: 17-25
II மத்தேயு 6: 24-34
“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது”
இயேசுவே ஆண்டவர் என ஏற்றுக்கொண்டவர்கள்:
இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவிலிருந்து மறைப்பணியாளர்கள் சிலர் ஜப்பானுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றனர். அவர்கள் அங்கே சென்று கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது, அவர்கள் உடனே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இது மறைப்பணியாளர்களுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
‘கிறிஸ்துவை யாரும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாத சூழலில், இவர்கள் இப்படி உடனே ஏற்றுக்கொண்டார்களே!’ என்று மறைப்பணியாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், ஜப்பானியர்களிடம் இருந்த ஒரு வழக்கம் தெரிய வந்தது. ஜப்பானியர்கள்மீது யாராவது போர்தொடுத்து, அவர்களை வெற்றிகொண்டு விட்டால், அவர்கள் தங்களை வெற்றிக்கொண்டவர்கள் பின்பற்றும் சமயத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இதனால்தான் அமெரிக்காவிலிருந்து சென்ற மறைப்பணியாளர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தபோது, அவரை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த உண்மையை தெரிய வந்த மறைப்பணியாளர்கள் அவர்களிடம், “நீங்கள் ஏற்கெனவே உள்ள வழக்கத்தின்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர்மீது நம்பிக்கை கொண்டு உண்மையாய் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உண்மையாய்த்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றோம்” என்றார்கள். இப்படிப் பலரும் இயேசுவே ஆண்டவர் என நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.
ஆம், புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஜப்பானியர்கள், முன்பு தாங்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இயேசுவே ஆண்டவர் என நம்பி ஏற்றுக்கொண்டு, அவரை மட்டுமே வழிபட்டு வந்தார்கள். இன்றைய இறைவார்த்தை, ஒரே கடவுளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எந்தவொரு மனிதரும் இரண்டு தலைவர்களுக்கு உண்மையாய் இருக்க முடியாது. ஏதாவது ஒருவருக்கு மட்டுமே உண்மையாய் இருக்கமுடியும். நற்செய்தியில், இயேசு இது குறித்துப் பேசும்போது, “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகளை இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இயேசு சொல்ல வருவது நமக்குத் தெளிவாய் விளங்கும்.
குரு யோயாதா உயிரோடு இருந்த வரைக்கும் யாவே இறைவனை வழிபட்டு வந்த யூதா நாட்டு அரசன் யோவாசு, அவர் இறந்தபின் பாகால் தெய்வத்தை அங்கிருந்த தலைவர்களின் தூண்டுதலால் வழிபடத் தொடங்குகின்றான். இந்நிலையில் கடவுளின் ஆவியாரால் தூண்டப்பட்ட குரு யோயாதாவின் மகனான செக்கரியா யோவாசு மன்னனிடம் சென்று, “ஆண்டவரை நீங்கள் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்கிறார். இதனால் சீற்றம் அடைந்த யோவாசு மன்னன், செக்கரியாவைக் கொன்று போடுகின்றான். இதன்பிறகு அவன் சிரியா நாட்டுப் படையால் கொடுமையான முடிவினைச் சந்திக்கின்றான்.
யோவாசு ஆண்டவருக்கு மட்டும் பணிவிடை செய்திருந்தால், அவன் வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்திருப்பான்; ஆனால், அவன் ஆண்டவரைப் புறக்கணித்ததால், ஆண்டவர் அவனைப் புறக்கணிக்கின்றார். அதனால் நாம் இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்வது போல, அனைத்திற்கும் மேலாக ஆண்டவரை நாடி, அவருக்கு மட்டுமே பணிவிடை புரிந்து, அவரது அன்பு மக்களாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவர் ஒருவரால் மட்டுமே வாழ்வு கொடுக்க முடியும். அதனால் அவருக்கு மட்டுமே பணிவிடை செய்வோம்.
கடவுளைத் தேடுவோருக்குக் குறையொன்றும் இல்லை.
உன் கடவுளாகிய ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே ஊழியம் செய்.
இறைவாக்கு:
‘எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்’ (யோசு 24: 24) என்று மக்கள் யோசுவாவிடம் கூறுவார்கள். நாமும் ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் புரிந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.