இன்றைய புனிதர் † புனிதர் கேஸ்பர் பெர்டோனி ✠
புனிதர் கேஸ்பர் பெர்டோனி ✠
(St. Gaspare Bertoni)
குரு/ சபை நிறுவனர்:
(Priest/ Founder)
பிறப்பு: அக்டோபர் 9, 1777
வெரோனா, வெனிஸ் குடியரசு
(Verona, Republic of Venice)
இறப்பு: ஜூன் 12, 1853 (வயது 75)
வெரோனா, லொம்பார்டி-வெனிஷியா அரசு
(Verona, Kingdom of Lombardy-Venetia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: நவம்பர் 1, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
புனிதர் பட்டம்: நவம்பர் 1, 1989
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள்: ஜூன் 12
பாதுகாவல்:
“ஸ்டிக்மேடைன்ஸ்” (Stigmatines)
புனிதர் கேஸ்பர் பெர்டோனி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், “தூய ஸ்டிக்மாட்டா” (Congregation of the Sacred Stigmata) சபையின் நிறுவனரும் ஆவார்.
கி.பி. 1777ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, வெனிஸ் குடியரசின் “வெரோனா” (Verona) நகரில் பிறந்த இப்புனிதரின் தந்தை ஒரு சட்ட வல்லுநர் ஆவார். அவரது பெயர், “ஃபிரான்சிஸ்கோ பெர்டோனி“ (Francesco Bertoni) ஆகும். இவரது தாயாரின் பெயர் “ப்ரூநோரா ரவெல்லி” (Brunora Ravelli) ஆகும். இவரது குழந்தைப் பருவத்திலேயே இவரது ஒரே சகோதரி மரித்துப்போனார்.
ஆரம்பக் கல்வியை தமது பெற்றோரிடமே கற்ற பெர்டோனி, அதன் பின்னர், தமது சொந்த ஊரான வெரோனாவிலுள்ள “புனித செபாஸ்டியன்” பள்ளியின் (Saint Sebastian’s School) “இயேசு சபை” மற்றும் “மரியான் சபை” (Jesuits and the Marian Congregation) துறவியரிடம் கற்றார்.
இவர் “புது நன்மை” (First Communion) பெறும்போது ஒரு திருக்காட்சி காணக் கிடைத்தது. அதன் அறிவுறுத்தலின்படி, கி.பி. 1796ம் ஆண்டு, குருத்துவ கல்வி கற்க ஆரம்பித்தார். கி.பி. 1796ம் ஆண்டு, ஜூன் மாதம், முதல் தேதியன்று, ஃபிரான்ஸ் நாட்டின் “ஃபிரெஞ்ச் புரட்சிப் படைகள்” (French Revolution – troops) இத்தாலி நாட்டின் வடக்குப் பிராந்திய நகரங்களை இருபதாண்டு கால ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருந்தன.
பெர்டோனி, மருத்துவமனைகளுக்கான “நற்செய்தி சகோதரத்துவ குழுவில்” (Gospel Fraternity) இணைந்து, புரட்சிப்படைகளின் நடவடிக்கைகளால் காயமுற்ற, நோயுற்ற மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியாற்ற தொடங்கினார். அவர் 1800ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 20ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
பெர்டோனி, “புனிதர் மகதலின் கனோஸ்ஸா பள்ளியின் அருட்சகோதரியரின் (Sisters of Saint Magdalen Canossa Convent) ஆலய குருவாக பணியாற்றிய அதே வேளையில், அருட்சகோதரியினரதும் குருத்துவ கல்லூரியினதும் ஆன்மீக இயக்குனராகவும் (Spiritual Director) பணியாற்றினார். ஃபிரெஞ்ச் பேரரசர் நெப்போலியனால் (Napolean Bonaparte) சிறை பிடிக்கப்பட்டிருந்த திருத்தந்தை ஏழாம் பயசு’க்காக (Pope Pius VII) ஆதரவளிப்போர் மற்றும் செபிக்கும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
மரியான் செபக்கூடங்களை நிறுவுதல், இயேசுவின் ஐந்து காய பக்தியைப் பரப்புதல் மற்றும் எழைகளுக்கான பள்ளிகளை நிறுவுதல் ஆகியன புனிதர் கேஸ்பர் பெர்டோனி அவர்களின் முக்கிய மறைபணிகளாக இருந்தன. 1816ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4ம் தேதி, “இயேசு கிறிஸ்துவின் தூய ஐந்து காய தழும்புகளின் சபை” (Congregation of the Sacred Stigmata of Our Lord Jesus Christ) எனும் சபையை தோற்றுவித்தார். 2012ம் வருட அறிக்கையின்படி, இச்சபையில் 94 இல்லங்களும் 331 குருக்கள் உள்ளிட்ட 422 உறுப்பினர்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.
புனிதர் கேஸ்பர் பெர்டோனி தமது இறுதி நாட்களில் காய்ச்சல் போன்ற நோய்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டார். தமது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை தமது வலது காலில் ஏற்பட்ட நோய்த் தொற்றுடனேயே கழித்தார். அவருடைய காலின் நோய்த்தொற்றை நீக்கும் முயற்சியாக, கடந்த இருபது ஆண்டுகளில், அவரது வலது காலில் முன்னூறுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்படியும், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் 1853ம் ஆண்டு தாம் மரிக்கும்வரை தமது சேவையைத் தொடர்ந்தார்.
Comments are closed.