இன்றைய புனிதர் † (ஜூன் 3) ✠ புனிதர் சார்ளஸ் லுவாங்கா

புனிதர் சார்ளஸ் லுவாங்கா ✠
(St. Charles Lwanga)
மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: ஜனவரி 1, 1860
புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Kingdom of Buganda)
இறப்பு: ஜூன் 3, 1886 (வயது 26)
நமுகோங்கோ, புகாண்டா அரசு, ஆபிரிக்கா
(Namugongo, Kingdom of Buganda)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheranism)
முக்திபேறு பட்டம்: 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)
புனிதர் பட்டம்: அக்டோபர் 18, 1964
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)
முக்கிய திருத்தலங்கள்:
உகாண்டா மறைசாட்சியர் பேராலயம், முன்யோன்யோ மறைசாட்சியர் திருத்தலம்
(Basilica of the Uganda Martyrs, Munyonyo Martyrs Shrine)
நினைவுத் திருநாள்: ஜுன் 3
பாதுகாவல்:
ஆப்பிரிக்க கத்தோலிக்க இளைஞர் செயல்பாடுகள் (African Catholic Youth Action), மனம் மாறியவர்கள் (Converts), துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
புனிதர் சார்ளஸ் லுவாங்கா கத்தோலிக்க திருச்சபைக்கு மதம் மாறி வந்த உகாண்டா நாட்டு ஆதிவாசி ஆவார். இவர் கிறிஸ்துவின் மீதுள்ள தமது விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். 13 முதல் 30 வயதுக்குள்ளான 22 இளைஞர்களில் ஒருவராக சார்ளஸ் லுவாங்காவும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.
“பகாண்டா ஆதிவாசி” (Baganda tribe) இனத்தைச் சேர்ந்த சார்ளஸ் லுவாங்கா, தற்போதைய உகாண்டா நாட்டின் மத்திய தென் பிராந்தியத்தில் பிறந்தவர் ஆவார். அன்றைய புகாண்டா அரசின் மன்னனான “இரண்டாம் முவாங்காவின்” (Court of King Mwanga II of Buganda) அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் ஆவார். இவர் “பியர் கிரௌட்” (Pere Giraud) என்ற கத்தோலிக்க குருவால் 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, திருமுழுக்கு செய்விக்கப்பட்டார்.
வெளிநாட்டு காலனித்துவத்தை எதிர்க்கும் அரசனின் முயற்சியாக, புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தமது விசுவாசத்தை கைவிட வலியுறுத்தினான். கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை 1885 மற்றும் 1887 ஆகிய வருடங்களுக்கிடையான காலகட்டத்தில் தூக்கிலிட்டு கொன்றான். தமது அரசவையிலிருந்த சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட தமக்கு நெருக்கமான அலுவலர்களையும் கொன்றான்.
மதத்திற்கான வீரமரணம்:
(Martyrdom)
பண்டைய புகாண்டா நாட்டில் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் 1885ம் ஆண்டு தொடங்கின. கத்தோலிக்க சமூகத்தினரின் தலைவரான ஆயர் “ஜேம்ஸ் ஹன்னிங்டன்” (Bishop James Hannington) உள்ளிட்ட ஆங்கிலிக்கன் சமூகத்தினர் புகாண்டாவின் அரசன் “இரண்டாம் முவாங்காவால்” (King Mwanga II of Buganda) கொன்று குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், அரசவையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவரும் கிறிஸ்தவ கொள்கைகளை கற்பிக்கும் ஆசிரியருமான (Lay Catechist) “ஜோசஃப் முகாஸா பலிகுட்டெம்ப்” (Joseph Mukasa Balikuddembe) என்பவர் அரசனின் இத்தகைய கொலை செயல்களுக்காக அவனை கண்டித்தார். அரசனுக்கு நல்ல ஆலோசனைகள் கொடுத்தார். ஆனால் அரசனோ, “ஜோசஃப் முகாஸா’வை” பிடித்து தலையை வெட்டி கொலை செய்தான். அத்துடன், 1885ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாளன்று, ஜோசஃபின் ஆதரவாளர்களையும் அவரை பின்பற்றுபவர்களையும் கைது செய்தான். கொலை செய்யப்பட்ட “ஜோசஃப் முகாஸா’வின்” பணிகளை சார்ளஸ் லுவாங்காவிடம் அரசன் ஒப்படைத்தான். அன்றைய தினம்தான் லுவாங்கா திருமுழுக்கு பெற்றார்.
அரசன் “இரண்டாம் முவாங்கா’வின்” (King Mwanga II of Buganda) முறைகேடான, ஒழுக்கக்கேடான பாலியல் விருப்பங்களுக்கு ஒப்புக்கொள்ளாத சார்ளஸ் லுவாங்கா உள்ளிட்ட இளைஞர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களனைவரும் கொல்லப்படுவதன் முதல் நாளன்று, சார்ளஸ் லுவாங்கா அங்கிருந்த மற்ற இளைஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து கிறிஸ்தவர்களாக மனம் மாற்றினார்.
நாட்டை அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காக கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தொடங்கிய அரசன் முவாங்காவின் கோபம், தன்னுடைய சுய பாலியல் விருப்பங்களுக்கு இளைஞர்கள் ஒத்துப்போகாததால் அதிகமாக எரிந்தது. அரசன் அவ்விளைஞர்களை கொல்ல தீர்மானித்தான். இருப்பினும் அவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிட வற்புறுத்தினான். ஆனால், அனைத்து இளைஞர்களுமே கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.
இளைஞர்கள் 22 பேரும் கொல்லப்பட வேண்டிய நாளான 1886ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதியும் வந்தது. சார்ளஸ் லுவாங்கா தனியாக கொல்லப்படுவதற்காக பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவர் எரிக்கப்படுமுன்னர், எரிப்பவனைப் பார்த்து, “இந்த தீ எனக்கு குளிரும் தண்ணீர் போன்றது; நீயும் மனம் மாறு; என்னைப்போல கிறிஸ்தவனாகு” என்றார். பின்னர் அவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.
கத்தோலிக்க இளைஞர்கள் 12 பேரும், ஆங்கிலிக்கன் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பேரும், தனித்தனியாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர், “முபாகா டுஸின்டே” (Mbaga Tuzinde) என்ற கத்தோலிக்க இளைஞரும் கிறிஸ்தவ விசுவாசத்தை விட மறுத்த காரணத்துக்காக மரணத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, தீயில் எரியப்பட்டார்.
“உகாண்டா மறைசாட்சியரின் பேராலயம்” (Basilica of the Uganda Martyrs) அவர்கள் கொல்லப்பட்ட “நமுகோங்கோ” (Namugongo) என்ற இடத்தில் கட்டப்பட்டது.
சார்ளஸ் லுவாங்காவுடன் மரணத்தில் உடன் பயணித்த பிற கத்தோலிக்கர்க இளைஞர்களும் 1964ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.

Comments are closed.