வாசக மறையுரை (ஜூன் 01)

பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 20: 28-38
II யோவான் 17: 11b-19
“தீயோனிடமிருந்து காத்தருளும்”
இப்படியா வேண்டுவது?
நண்பர்கள் சிலர் சிறுபடகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலுக்குச் சென்று, மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று கடலில் புயல் வீசியது. இதனால் அவர்கள் இருந்த படகு புயலில் அலைக்கழிக்கப்பட்டது.
படகில் இருந்த ஒருவரைத் தவிர்த்து மற்ற எல்லாரும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள். அந்த நேரத்தில் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அவர்கள், கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருந்த நண்பரிடம், “நண்பா! உனக்குத்தான் கடவுள்மீது நம்பிக்கை உண்டே! அதனால் நீ, இந்தப் புயலிலிருந்து நம் அனைவரையும் கடவுள் காப்பாற்றுமாறு அவரிடம் வேண்டு. நிச்சயம் அவர் நம்மை இந்தப் புயலிலிருந்து காப்பாற்றுவார்” என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
அதற்குக் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவன், “எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், அவரிடம் வேண்டிப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதே! இப்போது நான் அவரிடம் வேண்டினால், அவர் என்னுடைய வேண்டுதலைக் கேட்பாரா?” என்று தயக்கத்தோடு சொன்னான். “அதெல்லாம் கடவுள் உன்னுடைய வேண்டுதலைக் கேட்பார்” என்று நண்பர்களில் ஒருவன் அவனுக்கு நம்பிக்கையூட்டினான். உடனே அவன் இவ்வாறு கடவுளிடம் வேண்டினான்: “இறைவா! உம்மிடத்தில் நான் வேண்டிப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மட்டும் நீர் எங்களை இந்தப் புயலிலிருந்து காப்பாற்றினால், இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு உம்மைத் தொந்தரவு செய்யமாட்டேன்.”
வேடிக்கையான நிகழ்வாக இது இருந்தாலும், இன்றைக்குப் பலர் ஆபத்துக் காலத்தில் மட்டும் கடவுளிடம் வேண்டுவதைப் பகடி செய்கின்றது. இறைவேண்டல் என்பது எப்போதாவது வேண்டுவது அல்ல, எப்போதும் வேண்டுவது. நற்செய்தியில் இயேசு, “தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பெரிய குருவாம் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி வேண்டுகின்ற ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு, தீயோனிடமிருந்து சீடர்களை, அல்லது இவ்வுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மறுவுலகு சார்ந்த வாழ்க்கை வாழும் மக்களைக் காத்தருளுமாறு தந்தையிடம் மன்றாடுகின்றார். ஏற்கெனவே இயேசு சாத்தானை வெற்றிகொண்டிருந்தாலும் (யோவா 16:33), உலகில் உள்ள தீய சக்திகள் தன்னுடைய சீடர்களைத் தாக்காமல் இருக்க, அவர் தந்தையிடம் மன்றாடுகின்றார்.
முதல் வாசகத்தில் எபேசு நகரில் இருந்த மூப்பர்களிடம் பவுல், தான் அவர்களிடமிருந்து போனபின்பு கொடிய ஓநாய்கள் அவர்கள் நடுவில் புகுந்து, அவர்களைச் சிதறடிக்கும். அதனால், “தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாராக” என்கிறார். இங்கே கொடிய ஓநாய்கள் என்று பவுல் சொல்வது போலி இறைவாக்கினர்கள். இயேசுவும் இதைத் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நம்மைத் தீயோனிடமிருந்து காப்பதற்காகத் தந்தையிடம் வேண்டும் இயேசுவுக்கு நன்றி சொல்லி, அவரது உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 நமக்காக எப்போதும் தந்தையிடம் பரிந்து பேச இயேசு இருக்கின்றார் (எபி 7:25). அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்வோம்.
 ஓநாய்கள் போன்ற மனிதர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்.
 கடவுளுக்கு உகந்த வழியில் நடப்போருக்கு, அவரது பாதுகாப்பு எப்போதும் உண்டு.
இறைவாக்கு:
‘தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்’ (மத் 6:13) என்று இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்த இறைவேண்டலை நம்பிக்கையோடு சொல்லி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.