ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்
மனித சமுதாயத்தின் நலன்மீது அக்கறையின்றி இதுவரை நடைபெற்ற ஆயுத வர்த்தகம் போதும், இனிமேலும் அது தொடர்ந்து இடம்பெறக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 25, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மே 24, இச்செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Texas மாநிலத்தின் Uvalde நகரிலுள்ள, Robb தொடக்கப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, தாறுமாறாகச் சுட்டதில் 19 சிறார் மற்றும், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைக் கேட்டு என் இதயம் நொறுங்கியது என்றும், இவ்வன்முறையில் கொல்லப்பட்ட சிறார், வயதுவந்தோர் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன், இத்தகைய கடுந்துயரங்கள் ஒருபோதும் இடம்பெறாதிருக்க நம்மை அர்ப்பணிப்போம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த இஸ்பானியப் பள்ளியில், ஏழுக்கும், பத்து வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 500 சிறார் படிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்வன்முறையை நடத்தியவர் Salvador Ramos என்ற இளைஞர் எனவும், இவர் இப்பள்ளியில் துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்குமுன், தன் பாட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கு வந்துள்ளார் எனவும், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் அந்த இளைஞரும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளால் கொல்லப்பட்டார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
சிகாகோ கர்தினால் Cupich அவர்கள் கண்டனம்
மேலும், இவ்வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சிகாகோ பேராயர் கர்தினால் Blase Cupich அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மக்களைவிட துப்பாக்கிகளே அதிகம் எனவும், அமெரிக்கா துப்பாக்கிகளில் மிதக்கின்றனவா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர், உரிய அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் என்றும், கர்தினால் Cupich அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிகப் பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும், பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Comments are closed.