ஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்
உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59
அக்காலத்தில்
இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.
இயேசு மறுமொழியாக, “நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார்.
யூதர்கள் இயேசுவை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
“என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்”
தவக் காலத்தின் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
I தொடக்க நூல் 17: 3-9
II யோவான் 8: 51-59
“என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்”
கீழ்ப்படியாமையும் தண்டனையும்:
டயானாவிற்குப் பத்து வயதுதான் இருக்கும். ஆனாலும், அவள் தன் தாய்க்குக் கீழ்ப்படியாமல், அவர் சொல்வதற்கு மாறாக எதையாவது செய்து வந்தாள்.
“இதோ பார் டயானா! நான் உன்னுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறேன். அதனால் அம்மா சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்து நட” என்று டயானாவின் தாய் அவளிடம் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்துவிட்டார். அப்படியிருந்தும் அவள் கேளாமல் தன் விரும்பம் போல நடந்துகொண்டாள்.
ஒருநாள் அதிகாலை வேளையில் டயானாவின் தாய் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது தூங்கி எழுந்து வந்த டயானா வீட்டில் இருந்த ஒரு பழைய மர நாற்காலியில் அமரப் போனாள். “அந்த நாற்காலியில் உட்காராதே டயானா! உடைந்திருக்கின்றது! பக்கத்தில் இருக்கின்ற வேறொரு நாற்காலியில் உட்கார்” என்றார் டயானாவின் தாய். அவர் சொன்னதைக் கேளாமல், டயானா உடைந்துபோன நாற்காலியிலேயே உட்கார்ந்தாள். இதனால் அது அவளுடைய காலில் விழுந்து, காலைப் பதம் பார்த்தது.
‘அம்மா’ என்று அலறிய டயானாவை அள்ளியெடுத்து, அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவளது தாய், அவளுக்கு நல்லதொரு சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின் அவள் தன் தாய் சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிந்து நடந்தாள். ஏனெனில், தாய் தனது நல்லதுக்காகத்தான் சொல்கிறார் என்பதை அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள்.
ஆம், நமது பெற்றோருக்கும்; ஏன், கடவுளுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அதுவே நமக்கு நன்மை பயக்கும். இன்றைய இறைவார்த்தை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் ஆசிகளைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, ஆபிரகாமும் அவரது வழிமரபினரும் உடன்படிக்கையின் படி நடக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்தால், அவர்கள் கடவுளின் மக்களாக இருப்பார்கள். கடவுள் அவர்களுக்குத் தந்தையாக இருப்பார். இதைப் பற்றி நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.
ஆபிரகாம் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி அவர் நடந்தாலும், அவரது வழிமரபினர் உடன்படிக்கையின்படி நடக்கவில்லை. அதனால் அவர்கள் துன்பங்களை அனுபவித்தார்கள் இது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்தார்.
நற்செய்தியில் இயேசு, “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார். இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வளிப்பவை (யோவா 6: 63, 66). ஆனால், இயேசு சொன்னதை மேம்போக்காகப் புரிந்துகொண்ட பரிசேயர்கள் அவரைப் பேய்பிடித்தவன் என்கிறார்கள். இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழும்போது, நம் உடல் அழிந்தாலும், நாம் நிலைவாழ்வைப் பெறுவோம். அதையே இயேசு கூறுகின்றார்.
எனவே, நாம் கடவுள் நம்மோடு செய்திருக்கும் உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், அவரை அன்பு செய்ய முடியாது.
கடவுள் தமது உடன்படிக்கைக்கு உண்மையாய் இருப்பது போல், நாமும் உண்மையாய் இருப்போம்.
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுள் அன்பு நிலைத்திருக்கின்றது.
?இறைவாக்கு:
‘கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது. கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது’ (1 சாமு 15:22) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.