ஏப்ரல் 4 : நற்செய்தி வாசகம்
உலகின் ஒளி நானே.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 12-20
அக்காலத்தில்
இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார். பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.
அதற்கு இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பு செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப்பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்றார். அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்” என்றார்.
கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
“நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள்”
தவக் காலத்தின் ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை
I தானியேல் (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62
II யோவான் 8: 12-20
“நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள்”
மகளைத் தவறாகத் தீர்ப்பிட்ட தாய்:
தன் மகள் கையில் இரண்டு ஆப்பிள்கள் வைத்திருந்ததைப் பார்த்த தாய் அவளிடம், “மகளே! உன்னிடம் இரண்டு ஆப்பிள்கள் உள்ளன அல்லவா! அதனால் அவற்றில் ஏதாவது ஒன்றை எனக்குத் தரமுடியுமா?” என்று கேட்டாள்.
சிறுமி தன் தாயை ஒருவினாடி பார்த்தாள். பின்னர் அவள் தனது வலக்கையில் இருந்த ஆப்பிளை ஒரு கடி கடித்தாள். ‘வலக்கையில் உள்ள ஆப்பிளைக் கடித்துவிட்டாள். இடக் கையில் உள்ள ஆப்பிளை எப்படியும் அவள் எனக்குத் தருவாள்’ என்று தாய் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவள் இடக்கையில் உள்ள ஆப்பிளையும் கடித்தாள் இதனால் தாய்க்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.
‘என் மகள் இப்படித் தன்னலத்தோடு இருக்கின்றாளே!’ என்று தாய் மகளை நினைத்து உள்ளுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், மகள் தனது வலக்கையில் இருந்த ஆப்பிளைத் தாயிடம் நீட்டி, “அம்மா! என்னிடம் உள்ள ஆப்பிளை விடவும், இந்த ஆப்பிள் சுவையாக இருக்கின்றது. அதனால் இதைச் சாப்பிடுங்கள்” என்றாள். இதைக் கேட்டதும் தாய், ‘மகளைப் பற்றித் தவறாக நினைத்துவிட்டேனே’ என மிகவும் வருத்தப்பட்டார்.
ஆம், மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் தாயைப் போன்று அடுத்தவரைத் தவறாகத் தீர்ப்பிடுகின்றோம். இந்நிலையில் இயேசு இன்றைய நற்செய்தியில், “நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் கொண்டாடிய கூடாரப் பெருவிழாவில், இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. அதில் பரிசேயர்கள் இயேசுவைப் பற்றி முழுமையாக அறியாமல் பேசுகின்றபோதுதான் அவர் அவர்களிடம், “நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கின்றீர்கள்” என்கிறார்.
பரிசேயர்கள் உட்பட நாம் அனைவரும் உலகப் போக்கின்படியே தீர்ப்பு அளிக்கின்றோம். இதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய முதல் வாசகம். முதல் வாசகத்தில் இரண்டு முதியவர்களின் பொய்ச் சான்றைக் கேட்டு, அது உண்மையென நம்பி, இஸ்ரயேல் மக்கள் கூட்டம் சூசன்னாவிற்குச் சாவுத் தீர்ப்பிடுகின்றது. அப்போது அங்கு வரும் தானியேல் இரண்டு முதியவர்களையும் தனித்தனியாக விசாரித்து, அவர்கள் சூசன்னாவிற்கு எதிராகச் சொன்னதெல்லாம் பொய் என நிரூபித்து, அவர்கள் இருவரையும் மக்களின் கையில் ஒப்புவிக்கின்றார். மக்கள் அவர்களைக் கொன்று போடுகின்றார்கள்.
ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த சூசன்னாவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு, மனிதர்கள் எப்படி உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. ஆண்டவர் இயேசுவுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தாலும் அவர் யாரையும் தீர்ப்பிடவில்லை. எனவே, நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
நம்மையே நாம் முழுமையாக அறிந்திராதபோது, மற்றவர்களை நாம் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தீர்ப்பிடுவது மிகவும் தவறு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை நமது வாழ்வில் உணர்வது நல்லது.
நல்லவற்றைப் பேசுவோம். அல்லவை தானாக விலகும்.
இறைவாக்கு:
‘உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்’ (நீமொ 14: 25) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாமலும், தீர்ப்பிடாமலும் இருந்து, ஆண்டவரின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.