ஏப்ரல் 3 : நற்செய்தி வாசகம்
உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்
இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“இனிப் பாவம் செய்யாதீர்!”
தவக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
I எசாயா 43: 16-21
II பிலிப்பியர் 3: 8-14
III யோவான் 8: 1-11
“இனிப் பாவம் செய்யாதீர்!”
தீயவர் திருந்த வாய்ப்புத் தாருங்கள்:
ஆற்றங்கரையோரமாய் இருந்த அந்தத் துறவியைப் பார்க்க கூட்டம் அலைமோதும். அன்றைய நாளில் அவரைப் பார்க்க பலரும் வந்திருந்தனர். அவர்களோடு ஒரு தீயவனும் வந்திருந்தான். துறவி மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு, முதலில் அந்தத் தீயவனைத் தன்னிடம் அழைத்து, அவனோடு சிறிதுநேரம் பேசிவிட்டு அனுப்பி வைத்தார்.
இச்செயல் மற்றவருக்குத் துறவியின்மீது சினத்தை வரவழைத்தது. அவர்கள் துறவியிடம், “இத்தனை பேரும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்க, எங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு பாவிக்கு முதலிடம் கொடுக்கிறீர்களே! இது ஓர வஞ்சனையாக இல்லையா?” என்று அவரை மெல்லக் கடிந்து கொண்டார்கள். அதற்குத் துறவி அவர்களிடம், “நீங்கள் நல்லவர்கள். அதனால் இதுபோன்ற நற்செயல்களில் அடிக்கடி ஈடுபட உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்தீயவனுக்கு மனம்மாற வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவதுதான் ஏற்படும், அப்போது அவனுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதுதானே முறை!” என்று புன்னைகையோடு பதில் கூறினார்.
ஆம், தீயவர்கள் மனம்மாறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். அதுதான் நல்லது. இன்றைய நற்செய்தியில் இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு மனம்மாறுவதற்கு வைப்பினை ஏற்படுத்தித் தருகின்றார். இயேசுவின் இத்தகைய செயலும், தவக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்திப்போம்.
பாவத்தில் விழுந்துகிடக்கும் மக்கள்:
கடவுளின் சாயலைத் தாங்கியிருக்கும் நாம் (தொநூ 1:26), கடவுளைப் போன்று தூயவர்களாக இருக்க வேண்டும் (லேவி 19:2); ஆனால், நாம் நம்முடைய மனித பலவீனத்தால் பாவத்தில் விழுந்து கிடக்கின்றோம்.
இன்றைய நற்செய்தியில் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் கொண்டு வருவது பற்றி நாம் வாசிக்கின்றோம். விபசாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ அல்லது தனது மனித பலவீனத்தாலோ அத்தகையதொரு தொழிலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக அவரை மட்டும் பாவி என்று முத்திரை குத்திவிட முடியாது. “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று இயேசு சொன்னபிறகு, முதியோர் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து சென்றதை வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் பாவிதான் என்று சொல்லலாம்.
இப்படிச் சூழ்நிலையின் காரணமாகவும், மனித பலவீனத்தாலும் பாவம் செய்பவர்களைக் கடவுள் அப்படியே ஒதுக்கிடுவதில்லை. மாறாகக் கடவுள் அவர்கள் மனம்மாறுவதற்கு வாய்ப்புத் தருகின்றார். அதனால்தான் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், “இனிப் பாவம் செய்யாதீர்” என்று கூறி, இயேசு அவர் மனம்மாறுவதற்கு வாய்ப்புத் தருகின்றார். இயேசு இவ்வாறு செய்வதன் மூலம், “தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழியினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்” (எசே 33:11) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருகின்றார்.
பாவத்தை விட்டுவிலகிய பவுல்:
தீயவர் தம் வழியினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். இவ்வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சான்றாய் இருப்பவர் பவுல்.
ஒரு காலத்தில் திருஅவையைத் துன்புறுத்தியதன் மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். இவரைக் கிறிஸ்து தண்டித்திருக்கலாம். ஆனால், கிறிஸ்து பவுலை அப்படிச் செய்யாமல், அவர் திருந்துவதற்கு வாய்ப்புத் தருகின்றார். அந்த வாய்ப்பினைக் கிறிஸ்து, பவுலின் தமஸ்கு நகர் நோக்கிய பயணத்தில் தருகின்றார். பவுலும் அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கிறிஸ்துவுக்காக தன் உயிரையும் தர முன் வருகின்றார்.
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு, மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன்” என்கின்றார். கிறிஸ்தவரகளைத் துன்புறுத்தியதன் மூலம், கிறிஸ்துவைத் துன்புறுத்திய பவுல், கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மாற்றம்! இத்தகைய மாற்றம் அவரிடம் ஏற்பட்டதற்குக் காரணம், கிறிஸ்து அவருக்கு மனம்மாறுவதற்கு வாய்ப்புக் கொடுத்ததாலேயே ஆகும் என்று உறுதியாகச் சொல்லாம். இதையடுத்து, அவர் சொல்லும், “கடந்ததை மறந்துவிட்டு, இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்’ என்ற வார்த்தைகளும் மிகவும் கவனிக்கத் தக்கவை.
ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதால் ‘பாவி’யாக வாழ்ந்த பவுல், கடந்ததை மறந்துவிட்டு, இலக்கை நோக்கி அல்லது கிறிஸ்துவை நோக்கி ஓடினார் எனில், நாம் ஒவ்வொருவரும் கடந்ததை மறந்துவிட்டு, கடந்ததை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓட வேண்டும். அவ்வாறு நாம் இயேசுவை நோக்கி, ஓடினோம் என்றால், அவர் அதற்குரிய பரிசனைத் தருவார். அப்பரிசு எத்தகையது என்று சிந்திப்போம்.
பாழ்நிலத்தில் நீரோடை தோன்றும்:
கடவுள் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடிக்காததால், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர், அங்கே பன்மடங்கு தண்டனை பெற்றனர். அதன்பிறகு கடவுள் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடவுள் இறைவாக்கினர் எசாயா வாயிலாக, “முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்” என்று சொல்லிவிட்டு, “புதுச் செயல் ஒன்றை நான் செய்கிறேன்” என்கிறார்.
கடவுள் செய்யும் புதுச் செயல் என்பது பாழ்வெளியிலும் பாழ்நிலத்திலும் நீரோடைகள் தோன்றச் செய்வது. இஸ்ரயேல் நாடு வறண்ட நிலப்பரப்பைக் கொண்டது. அங்கே தண்ணீர் என்பதே அதிசயம்தான். இத்தகைய சூழ்நிலையில் கடவுள் அவர்களிடம் நீரோடைகள் தோன்றச் செய்வேன் என்று வாக்களிக்கின்றார். இந்த நீரோடையை வாழ்வளிக்கும் தண்ணீரான இயேசுவோடு (யோவா 4:14, 7:38) நாம் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.
ஆம், யாரெல்லாம் முன்பு நடந்ததை மறந்துவிட்டு, அல்லது முன்பு செய்ததை விட்டுவிட்டுப் பவுலைப் போன்று இலக்கை நோக்கி ஓடுகின்றார்களோ அவர்களது வறண்ட உள்ளத்தில், நிலைவாழ்வளிக்கும் இயேசு பொங்கி எழுவார். ஆதலால், நாம் செய்ய வேண்டியதெல்லாம், பாவத்தை விட்டுவிட்டு, இலக்கை நோக்கி ஓடுவதுதான்.
கடவுள் தமது அளவற்ற இரக்கத்தாலும் பேரன்பினாலும் நாம் மனம் மாறுவதற்கு வாய்ப்புத் தந்துகொண்டே இருக்கின்றார். எனவே, நாம் பாவத்தை விட்டுவிட்டு, இயேசுவை நோக்கி, நடைபோட்டு, அவர் தரும் ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
‘பழைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறாமல், ஒருவர் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியாது’ என்பார் புனித அகுஸ்தின். எனவே, நாம் பாவத்திலிருந்து மனம்மாறி, புதியதொரு வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.