மாற்றுத்திறன், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்ப
மிகவும் வலுவற்றோரை உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எல்லாரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 01, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த இத்தாலிய அமைப்பு ஒன்றிடம் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 02, இச்சனிக்கிழமையன்று ஆட்டிசம் விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இவ்வெள்ளி காலையில், இத்தாலிய ஆட்டிசம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், மற்றும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என, 215 பேரை, கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மிகவும் நலிவுற்றோர், மற்றும், வாய்ப்பிழந்தோருக்கு ஆதரவாக ஆய்வுத் திட்டங்கள், மற்றும், நற்பணிகளை முன்னெடுக்கின்ற, மற்றும் இந்நோயாளிகள் மத்தியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், உளவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள், இளையோர் போன்றோரைப் பாராட்டி ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாறு செயலாற்றுவதன் வழியாக, இவர்கள், போட்டி மற்றும், இலாபம் ஆகியவை முன்னிறுத்தப்படும் நம் சமுதாயத்தில் பரவியுள்ள புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு எதிராக, சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
நாம் இத்தகைய புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்குப் பலியாகியுள்ளோம் என, இந்த இத்தாலிய அமைப்பினரிடம் கூறியத் திருத்தந்தை, மாற்றுத்திறன்களோடு இருப்பவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி, தங்களின் பங்களிப்பை வழங்க வாய்ப்பளிக்கும் ஒரு பொருளாதாரம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.
மேலும், இந்நோயாளிகளைப் புறக்கணிக்காத ஒரு சமுதாயம் கட்டியெழுப்பப்படவேண்டும் எனவும், இதனால், இவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இவ்வமைப்பின் உறுப்பினர்கள் போன்றோர் தனித்துவிடப்படமாட்டார்கள், மாறாக, ஆதரவளிக்கப்படுவார்கள் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆட்டிசம் என்ற மாற்றுத்தினோடு வாழ்கின்ற மனிதர், தனது திறமைகளைக்கொண்டு, சமுதாயத்திற்குப் பணியாற்றுவதன் வழியாக, அவர் மற்றவருக்கு அடுத்திருப்பவராக மாற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
பங்கேற்பு, ஒருங்கிணைந்து பணியாற்றுதல், தோழமையை வெளிப்படுத்தும் ஒரு பொருளாதாரம் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை, இச்சந்திப்பின் இறுதியில், இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த சில இளையோர், இந்நாளில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தைச் சுற்றி வாழ்கின்ற வறியோருக்கு உணவு வழங்கவிருப்பதையும் அறிவித்தார்
ஆட்டிசம் என்பது, மூளை வளர்ச்சி குன்றிய ஒரு நோயாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தங்களையறியாமலேயே, தாங்கள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இந்தியாவில் பிறக்கும் 500 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
Comments are closed.