இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் 46:7-இல்,
“ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.” என வாசிக்கின்றோம்.
நமது இக்கட்டான வேளைகளில், நமது ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். நமக்கு அரணாயும் இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து, துன்ப வேளைகளில் அமைதியும், பொறுமையும் காத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.” என கூறப்பட்டுள்ளதை காண்கிறோம்.
அச்சம், பொறாமை, வஞ்சகம், தீய எண்ணங்கள், தீராத கவலை, ஆறாத மனக்காயங்கள் நிறைந்த நமது மனதை ஆண்டவர் எடுத்துவிட்டு புதியதோர் தூய உள்ளத்தை நமக்கு தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்.” என வாசிக்கின்றோம்.
பல ஆண்டுகளாக உடல் நலமில்லாமல் இருப்போர் அனைவரையும் பார்த்து இன்று ஆண்டவர், “நீ நலம்பெற விரும்புகிறாயா ?” என கேட்கிறார். “ஆம் ஆண்டவரே நான் நலம் பெற விரும்புகிறேன். நான் நலம்பெறுவேன் என விசுவசிக்கின்றேன்” என சொல்வோம்.
நோயுற்றோர் அனைவரும் இறைவனின் இரக்கத்தினால் சுகம் பெற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இத்தவக் காலத்தில் நாம் பிறரன்பு செயல்களில் அதிகம் ஈடுபடவும், செப தப முயற்சிகளில் ஆர்வமுடன் இருக்கவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்கவும், காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.