வாசக மறையுரை (மார்ச் 30)
தவக் காலத்தின் நான்காம் வாரம்
புதன்கிழமை
I எசாயா 49: 8-15
II யோவான் 5: 17-30
“கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார்”
கடவுள் பேசுகிறார்; நாம்தான் கேட்பதில்லை:
கவலை தோய்ந்த முகத்துடன் அருள்பணியாளரிடம் சென்ற ஓர் இளைஞன், “சுவாமி! நான் என்னுடைய கவலைகளையெல்லாம் கடவுளிடம் சொல்லி எத்தனையோ முறை மன்றாடி விட்டேன். இருந்தும், அவர் என்னுடைய மன்றாட்டிற்குச் செவிமடுக்க வில்லை” என்றான்.
அப்போது அருள்பணியாளர் ஏதோ முணுமுணுத்தார். “என்ன சொன்னீர்கள்?” என்று சொல்லிக்கொண்டு அவரருகில் வந்தான் அவன். அவர் மீண்டுமாக ஏதோ முணுமுணுத்தார். அதுவும் அவனுக்குச் சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவன் அவரை இன்னும் நெருங்கி வந்தான். இந்த முறை அருள்பணியாளர் சொன்னது அவனுக்குத் தெளிவாய்க் கேட்டது. அருள்பணியாளர் அவனிடம் சொன்னது இதுதான்: “கடவுள் எப்போதும் முழக்கமிடுவதில்லை; சில சமயங்களில் அவர் முணுமுணுக்கவும் செய்கிறார்.”
ஆம், கடவுள் தன் மக்களோடு பேசாமல் இருப்பதில்லை; அவர் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார். நாம்தான் அவரது குரலைக் கேட்பதில்லை! இன்றைய இறைவார்த்தை கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. நேற்றைய நற்செய்தியில் இயேசு முப்பத்து எட்டு ஆண்டுகளாகப் படுக்கையில் கிடந்த ஒருவரை நலமாக்கியதைக் குறித்து வாசித்தோம். இயேசு அந்த மனிதரை நலமாக்கியது ஓர் ஓய்வுநாள். அதனால் இயேசு நலமாக்கிய அந்த மனிதரைப் பரிசேயர்கள் துன்புறுத்துகிறார்கள். தவிர, ஓய்வுநாளில் ஒருவரை எப்படி நலமாக்கலாம் என்று அவர்கள் இயேசுவோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
அப்போதுதான் இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்.” என்கிறார். இயேசு சொன்ன இவ்வார்த்தைகள் பரிசேயர்களுக்குச் சீற்றத்தை வரவழைக்கின்றன. இது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், “ஆண்டவர் என்றுமுள கடவுள்” (எசா 40:27) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் ஆண்டவரும், ஏன், அவர் மகன் இயேசு கிறிஸ்துவும் இன்றும் என்றும் செயலாற்றுகின்றார் என்பது உண்மையாகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்து விட்டார் என்று புலம்பியபோது, தாய் மறந்தாலும், நான் உன்னை மறவேன் என்று சொல்லி, கடவுள் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றார். ஆதலால், கடவுள் நம்மோடு இருக்கின்றார். அவர் இன்றும் நம் நடுவில் செயலாற்றுகின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் நாம் நம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
கடவுள் தம் மக்களின் வழியாக இன்றும் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றார்.
கடவுளை நம்பிக்கை வாழ்வோரை அவர் ஒருபோதும் கைவிடுவதே இல்லை.
கடவுள் நம் வழியாகச் செயல்பட நாம் நம்மை அனுமதிப்போம்.
இறைவாக்கு:
‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்’ (மத் 28:20) என்பார் இயேசு. எனவே, நம்மோடு இருக்கின்ற, நம் நடுவில் செயலாற்றுகின்ற ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.