கடவுளின் இரக்கத்தை திறந்த இதயங்களோடு ஏற்போம்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் திருப்பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான  காணாமற்போன மகன் உவமையை மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, பரிவன்போடும், கனிந்த உள்ளத்தோடும் எப்போதும் மன்னிக்கும் இறைத்தந்தையின் இதயத்திற்கு இந்த உவமை நம்மை இட்டுச்செல்கிறது என்று கூறினார்.

கடவுள் எப்போதுமே மன்னிப்பவர், நம் கொடிய பாவங்களையும்கூட மன்னித்து, நம்மை வரவேற்று, நம்மோடு விருந்து கொண்டாடுபவர், ஆனால் நாம்தான் அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சோர்வடைகிறோம், ஆயினும் அவர் எப்போதும் மன்னிக்கின்றவர் என்று திருத்தந்தை உரைத்தார்.

நம் தவறுகளுக்காக மனம் வருந்தி, கடவுளின் இரக்கத்தைப் பெறுவதன் வழியாக அக்களிப்போம், அப்போது நம் அயலவரை, மனதில் சுமையின்றி நோக்கும் சக்திபெறுவோம் என்று கூறியத் திருத்தந்தை, நாமே அந்த காணாமற்போன மகன் என்றும், இறைத்தந்தை நம்மை எப்போதும் எவ்வளவு அன்புகூர்கிறார், மற்றும், நமக்காக அவர் எவ்வளவுதூரம் காத்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்கையில் மனம் உருகுகின்றது என்று கூறினார்.

நம் இதயங்களைத் திறப்போம்

விலைமகளிரோடு சேர்ந்து தந்தையின் சொத்துக்களையெல்லாம் அழித்தபின்னர் திரும்பிவந்து மன்னிப்புக் கேட்கும் காணாமற்போன மகனை மீண்டும் வரவேற்ற தன் தந்தை மீது சினமுற்ற மூத்த மகன் பற்றி இந்த உவமையில் கூறியிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூத்த மகனின் மனப்பாங்கு, நம் அனைவரிடமும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கடவுளோடு நமக்குள்ள உறவு, கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மற்றும், கடமையை நிறைவேற்றுவது என்பதிலே நம்பிக்கை வைத்து, மூத்த மகன் போன்று சினமுற நாமும் சோதிக்கப்படுகிறோம், ஆனால், கடவுளைத் தந்தையாக, அவரது அளவற்ற இரக்கம், பரிவன்பு மற்றும், அன்பு ஆகியவற்றை மறந்து விடுகிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அக்களியுங்கள், அகமகிழுங்கள்

“மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், என்னுடையதெல்லாம் உன்னுடையதே, இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான், மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான், மீண்டும் கிடைத்துள்ளான்” என்று, திறந்த இதயத்தோடு, காணாமற்போன மகனை வரவேற்றது பற்றி, தந்தை மூத்த மகனிடம் கூறியது குறித்தும் திருத்தந்தை விளக்கினார்.

மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும் என்று, இறைத்தந்தையின் இதயத்தில் இருந்த இந்தப் பண்புகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மகிழ்ந்துகொண்டாடுதல் என்பது, மனம் வருந்துவோருடன் அல்லது மனம்வருந்தும் பாதையை மேற்கொண்டிருப்போருடன் உடனிருப்பதாகும் என்று விளக்கினார்.

மனம் வருந்துவோரிடம் திறந்த இதயத்தோடு நெருக்கமாக இருந்து அவர்கள் கூறுவதற்கு உள்ளார்ந்த புன்னகையோடு, உண்மையிலேயே செவிமடுத்தால், நாமும் இன்புறுவோம் என்று கூறியத் திருத்தந்தை, நாம் அகமகிழவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

நம் அயலவரை கனத்த இதயத்தோடு நோக்காமல் இருப்பதற்கு, கடவுளின் இரக்கத்தை எவ்வாறு பெறுவது என்பதை புனித கன்னி மரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவோம் என்றுரைத்து, தன் ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.