இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத்i தியானித்து,
இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்ற வேளையில் மனிதகுல மீட்பிற்காக தனது மகனை தந்த எல்லாம் வல்ல நம் இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், “கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.” என கூறப்பட்டுள்ளது.
‘இம்மானுவேல் என்னும் இறைமகன்’ என்றும் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.” என வானதூதர் கூறுகிறார்.
நாம் அனைவரும், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதை எந்த சூழ்நிலையிலும் நினைவில் கொண்டிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என கூறுவதை காண்கிறோம்.
இறைவனின் சித்தமே எல்லாவற்றிலும் சிறந்தது என்பதை நாம் என்றும் உணர இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.