மார்ச் 26 : நற்செய்தி வாசகம்
பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”
இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
மேன்மை அடையத் தாழ்ச்சியே வழி!
தவக் காலத்தின் மூன்றாம் வாரம் சனிக்கிழமை
I ஓசேயா 6: 1-6
II லூக்கா 18: 9-14
மேன்மை அடையத் தாழ்ச்சியே வழி!
எது தாழ்ச்சி?
முன்பொரு காலத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கி வந்து, அந்நாட்டில் இருந்த ஒரு துறவியோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இது குறித்து அவர் உள்ளுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஒருநாள் அவர் துறவியிடம், “சுவாமி! ஆணவம் என்று சொல்கிறார்களே! அப்படியென்றால் என்ன?” என்று ஒன்றும் தெரியாதவர் போன்று கேட்டார். அதற்குத் துறவி அவரிடம், “இது முட்டாள்தனமான கேள்வி” என்றதும், மன்னர் தன் வாளை உருவி, “நான் கேட்டது முட்டாள்தனமான கேள்வியா? என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று துறவியைத் தாக்க முயன்றார்.
அப்போது துறவி அவரிடம், “இதற்குப் பெயர்தான் ஆவணம். ஏனெனில் தாழ்ச்சியோடு இருப்பவர் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டார். அவர் தன்னுடைய நிலையில் மிக உறுதியாக இருப்பார்” என்றார். இதைக் கேட்டு மன்னர் தன் தவற்றை நினைத்து வருந்தினார்.
ஆம், சிலர் தாழ்ச்சியோடு இருப்பதாக நடிப்பார்கள். உண்மையான தாழ்ச்சியோடு இருப்பவர்கள் ஒருபோதும் தங்கள் நிலையிலிருந்து மாறமாட்டார்கள். இன்றைய இறைவார்த்தை எது உண்மையான தாழ்ச்சி, தாழ்ச்சியோடு இருப்பவர்களுக்குக் கடவுள் எத்தகைய கைம்மாறு அளிக்கின்றார் என்பன பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘பசுத்தோல் போர்த்திய புலி’ போல் சிலர் தங்கள் ஆணவத்தை உள்ளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, அதைத் தாழ்ச்சி என்ற போர்வையில் வெளியே காட்டுவார்கள். இதற்குப் பெரிய உதாராணமாக வருபவர்தான் நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய பரிசேயரும் வரிதண்டுவோரும் உவமையில் வரும் பரிசேயர்.
இந்தப் பரிசேயர் கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் வரிதண்டுபவர் மீதான தனது வெறுப்பை உமிழ்ந்து, தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்கின்றார். இவ்வாறு அவர் தனது ஆணவத்தை வெளிப்படுத்துகின்றார். இதற்கு முற்றிலும் மாறாக, வரிதண்டுபவர் தனது தவற்றை உணர்ந்து, வானத்தை அண்ணார்ந்து பார்க்கத் துணியாமல், கடவுளின் இரக்கத்தை இறைஞ்சுகின்றார். இதனால் அவர் கடவுளுக்கு உகந்தவராகின்றார்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகிறேன்“ என்ற வரியோடு முடிகின்றது. இயேசு சொல்லும் உவமையில் வரும் பரிசேயர் கடவுளை அறிந்திருக்க வில்லை. அதனால்தான் அவர் ஆணவத்தோடு கடவுளிடம் வேண்டுகின்றார். வரிதண்டுவோர் கடவுளை அறிந்திருந்தார். அதனால்தான் அவர் முன் தாழ்ச்சியோடு நடந்து கொண்டார். நாம் கடவுளுக்கு முன்பு நம்மையே தாழ்த்தி, அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்.
சிந்தனைக்கு:
இறுமாப்பு ஒருவரை இடறிவிழச் செய்யும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும்
கடவுள் விண்ணகத்தை அடுத்து தாழ்ச்சி நிறைந்தவரின் உள்ளத்தில்தான் குடிகொண்டிருக்கின்றார்.
கடவுளுக்கு முன்பு நான் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தாழ்ச்சி
Comments are closed.