இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில், “என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள்.” என ஆண்டவர் கூறுகிறார்.

கடவுள்-மனித உறவிற்கு முக்கிய பாலமாக விளங்கும் அன்பிற்கு வலு சேர்க்க முக்கிய காரணியாக இருப்பது ‘கீழ்படிதல்’ என்ற நற்பண்பாகும். நாம் அனைவரும் இறைவனிடம் கீழ்படிதலுடன் நடக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,’ என ஆண்டவர் கூறுகிறார்.

பாவம் செய்த நாம் அனைவரும் இந்த தவக்காலத்தில் மனம் வருந்தி அருள் நிறைந்த, இரக்கம் மிகுந்தவரிடம் திரும்பிச் செல்ல வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் இயேசு தீய ஆவியால் பேய்களை ஓட்டுகின்றார் என்று சொல்வதற்கு இயேசு தக்க பதிலைக் கூறி அவர்கள் வாயை அடைக்கின்றார். நம்மையும்கூட பலர் தேவையற்ற விதமாய் விமர்சிக்கலாம், இவர்களை நாம் இயேசுவைப் போன்று விவேகத்தோடு எதிர்கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

இலங்கை நாட்டில் தற்போது மக்கள் சந்தித்துக் கொண்டிருகின்ற கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து அனைவரும் மீண்டுவர வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்

Comments are closed.