மார்ச் 19 : நற்செய்தி வாசகம்
ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே யோசேப்பு நடந்துகொண்டார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24a
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
மறையுரைச் சிந்தனை
புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா
மறையுரைச் சிந்தனை (மார்ச் 19)
கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்” என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.
எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். “ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்” என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.
அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.
மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். “எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க”? என்று கேட்டாள். அதற்கு அவன், “அத ஏன் கேட்குற, அது பெரிய கதை” என்றான். “சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?” என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, “பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்” என்றான்.
“ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே” என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், “என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க” என்றாள். அதைக் கேட்ட கணவன், “அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்” என்றான்.
பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
இன்றைக்கு ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். (மரியாள் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டாள் என நினைத்து அவளைக் கல்லால் எறிந்துகொன்றிருக்கலாம். ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை). மேலும் வானதூதர் கபிரியேல் யோசேப்பிற்குக் கனவில் தோன்றி நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்கிறபோது அவர் திறந்த மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்கிறார்.
யோசேப்பிடம் இருந்த அந்த திறந்த மனநிலை ஒவ்வொரு கணவன்மார்களிடமும் இருந்தால் குடும்பத்தில் பாதிப் பிரச்சனை குறைந்துவிடும். இன்றைக்கு கணவன்மார்களிடம் தன்னுடைய மனைவியைக் குறித்த திறந்த மனநிலை – உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை – இல்லாததனால்தான் எல்லாப் பிரச்சனைகளும், குழப்பங்களும்.
யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த பாடம் அவர் தாழ்ச்சியுள்ள/அகந்தையற்ற கணவராக விளங்கினார் என்பதுதான். இன்றைய நாள் விழாவே ‘மரியாளின் கணவர்’ யோசேப்பு” என்றுதான் இருக்கிறது. அதாவது ‘இன்னாருடைய மனைவிதான் இவள்’ என்று அழைக்கப்படும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் யோசேப்பு மரியாளின் கணவர் என்று அறியப்படுகின்றார். இது அவர் ஒரு தாழ்ச்சியுள்ள கணவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
யோசேப்பு ஒரு சிறந்த பொறுமைசாலியாகவும், பிடிவாதகுணமற்றவராகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மரியாள் கருவுற்றபோதும் சரி, ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோதும் சரி, எகிப்துக்குத் தப்பியோடிய போதும் சரி, எருசலேம் ஆலயத்தில் காணாமல் இயேசு போனபோதும் சரி மிகவும் பொறுமையாக இருக்கின்றார். தான் கொண்ட கருத்தான் சரி என்ற பிடிவாதக்குணத்தோடு இல்லாமல், உண்மையத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். எனவே கணவன்மார்கள்/ நாம் ஒவ்வொருவரும் யோசேப்பிடம் விளங்கிய பொறுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
குடும்ப வாழ்வில் கணவனும், மனைவியும் பிடிவாதக் குணமில்லாமல், அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் ஓர் ஒப்புமை.
வழக்கமாக சமையலுக்காக அம்மிக் கல்லில் தேங்காயை வைத்து அரைக்கும்போது அது வழுக்கிக்கொண்டுபோகும். மாறாக தக்காளியோ அப்படியே இசைந்துபோகும். ஆனால் இறுதியில் (பிடிவாதத்தோடு) வழுக்கிக்கொண்டு போன தேங்காய் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்காது, அனுசரித்துப் போன தக்காளிச் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்கும். ஆதலால் தக்காளியைப் போன்று கணவனும், மனைவியும் ஒருவருக்குக்கொருவர் அனுசரித்துப் போகும்போது குடும்ப உறவு இன்னும் வலுப்பெறும்.
யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கும், தன்னுடைய மனைவி மரியாளும் அனுசரித்துப் போனார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இறுதியாக, நிறைவாக யோசேப்பு ஒரு சிறந்த கணவனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவுக்கு ஒரு சிறந்த (வளர்ப்புத்) தந்தையாகவும் விளங்கினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்று “தந்தை தோளின் மீது ஏறிநின்று தானே, பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே” என்று. ஆம், தந்தை தான் இந்த உலகத்தை நமக்குக் காட்டியவர், அவர்தான் அறிவையும், ஞானத்தையும் நமக்குப் புகட்டியவர். இது இயேசுவுக்கும் பொருந்தும். இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்றால், அதில் யோசேப்பின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால் தமிழ் இலக்கித்தில் வரும் புறநானூற்றில் படிக்கின்றோம், “ஈன்று புறந்தருதல் என்தலை (தாய்க்குக்) கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று. அப்படியானால் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும், அறிவுத் தெளிவுக்கும் அடிப்படைக் காரணம் அவருடைய (வளர்ப்புத்) தந்தை யோசேப்பே ஆகும்.
ஆதலால் யோசேப்பு ஒரு சிறந்த கணவராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தந்தையாகும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகது. எனவே நாம் யோசேப்பைப் போன்று திறந்த மனத்தினராக, தாழ்ச்சி உள்ள கணவராக, பொறுமையுள்ளவராக, சிறந்த தந்தையாக வாழ அழைக்கப்படும் அதே தருணத்தில், நாமும் நம்மோடு வாழும் தந்தையைப் பேணிப் பராமரிக்க, அவருக்குப் பெருமை சேர்க்க, அவர் உள்ளம் குளிரும்படியான வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.
ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான்.
அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கிவந்து தாயிடம் கொடுத்தான். அதற்கு அவனுடைய தாய், “இத்தனை நாளும் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி, எல்லாச் செலவையும் செய்த உன் தந்தையிடம் போய் சம்பளத்தைக் கொடு” என்றாள். அதற்கு அவனோ முடியாது என்று மறுத்துவிட்டான். தாயானவள் மீண்டுமாக அவனிடம் பணத்தை தந்தையிடம் கொடு என்று சொல்லியும் அவன் கேட்காததால், அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அடி விட்டாள்.
“பணத்தை அப்பாவிடம் போய்க்கொடு, கொடு என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்” என்றாள் தாய். அதற்கு அவன், “அம்மா! ஒவ்வொரு முறையும் தந்தையிடம் நான் பணம் வாங்கும்போதும் அவருடைய கை மேலே இருக்கும், என்னுடைய கை கீழே இருக்கும். ஆனால் இப்போது நான் அவரிடம் சம்பளப் பணத்தைக் கொடுக்கும்போது அவருடைய கை கீழேயும், என்னுடைய கை மேலேயும் அல்லவா இருக்கும். அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன்” என்றான்.
இதை உள்ளறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனது தந்தை ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.
மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்துகொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.
ஆதலால் மரியாளின் கணவர் யோசேப்பின் (தந்தையின்) விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் நமது குடும்பங்களில் வாழும் தந்தையின் உள்ளம் குளிர நடந்துகொள்வோம். யோசேப்பிடம் விளங்கிய பண்புகளை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
Comments are closed.