போர் ஒருபோதும் வேண்டாம் என கடவுளின் பெயரால் கேட்கிறேன்

ஒருபோதும் போர் வேண்டாம் என, கடவுளின் பெயரால் கேட்கிறேன், போரில் எஞ்சியுள்ள கழிவுகளோடு விளையாடும் சிறாரை, போரில் இறந்தோரை, காயமடைந்தோரை, போரினால் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளோரை, மாண்புடைய ஒரு வாழ்வு புறக்கணிக்கப்பட்டுள்ளோரை முதலில் நினைத்துப் பாருங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 12, இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து செபிப்போம் என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, போரினால் பாதிக்கப்படும் சிறாரையும், மற்றவர்களையும் நினைத்துப் பார்க்குமாறு உலகினருக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஓர் உடன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை

மேலும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் ஊடகத்துறைக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமைதியான நல்லிணக்கம் நிறைந்த மற்றும், தற்போதைய நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு வருங்காலத்தை நோக்கித் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட்டு, கடந்த காலத்திற்குள் நாம் வீழ்ந்து வருகிறோம் என்று கூறினார்.

ஐரோப்பாவின் இதயத்தில் போரின் கொடூரம் அதிகரித்துவருவது குறித்து, திருப்பீடத் சமூகத்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்கு, மார்ச் 12, இச்சனிக்கிழமையன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார், கர்தினால் பரோலின்.

பேரழிவுகளை ஏற்படுத்தும் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும், போரின் பெரும் அழிவுகள் போதும் என்றும், ஓர் உடன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்றும் உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலையோடு எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னும், அமைதியான நல்லிணக்கம்கொண்ட ஓர் உலகை நம்மால் கட்டியெழுப்ப இயலவில்லை என்பதை நாம் ஏற்கவேண்டும் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், போர் முட்டாள்தனமானது, அது நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த வகையான பேச்சுவார்த்தைகளிலும் இடைநிலை வகிக்க திருப்பீடம் தயாராக உள்ளது என்பதை, மீண்டும் எடுத்துரைத்த திருப்பீடச் செயலர், இரத்த ஆறுகளும் கண்ணீர்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்போது அவற்றை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது, நாம் கல்லான இதயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகின்றது என்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலுள்ள, இரஷ்யாவின் திருப்பீடத் தூதரகத்திற்குத் திடீரென்று சென்று, போர் குறித்த தன் கவலையை தெரிவித்தார், இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Lavrov அவர்களோடு தொலைபேசியில் உரையாடி போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன், இவையனைத்திற்கும் மத்தியில் போர் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், கர்தினால் பரோலின்.

Comments are closed.