புனிதர் பெரிய கான்ஸ்டன்டைன் ✠
ரோமப்பேரரசின் 57வது பேரரசர்:
(57th Emperor of the Roman Empire)
பிறப்பு: ஃபெப்ரவரி 27, 272
நைஸ்ஸஸ், பெரிய மோஸியா, ரோமப்பேரரசு (தற்போதைய செர்பியா)
(Naissus, Moesia Superior, Roman Empire (Present-day Niš, Serbia)
இறப்பு: மே 22, 337 (வயது 65)
நிகொமேடியா, பித்தினியா, ரோமப்பேரரசு
(Nicomedia, Bithynia, Roman Empire)
“முதலாம் கான்ஸ்டன்டைன்” (Constantine I) என்று பொதுவாக அழைக்கப்படும் இவர், ரோமப்பேரரசின் 57வது ரோமப் பேரரசர் ஆவார். கி.பி. 324ம் ஆண்டுமுதல் 337ம் ஆண்டில் தாம் இறக்கும்வரை ஆட்சியில் இருந்த இவர், முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரானாவார். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆட்சியாளராக இருந்த கான்ஸ்டன்டைன், எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருந்தார். கிறிஸ்துவ துன்புறுத்தல்களை நிறுத்துவதும் ரோம சாம்ராஜ்யத்தில் உள்ள மற்ற எல்லா மதங்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் கிறிஸ்தவத்தை சட்டப்பூர்வமாக்குவதற்குமான முதல் பேரரசராக கான்ஸ்டன்டைன் இருந்தார்.
கி.பி. 308 முதல் 324 வரை ஆட்சி செய்த ரோமப் பேரரசன் “லிசினியஸ்” (Licinius) என்பவரை பின்னாளில் போரிட்டு வெற்றிகொண்ட கான்ஸ்டன்டைன், முதலில் அவரை 313ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் சந்தித்து, “மிலன் பிரகடணம்” (Edict of Milan) எனும் ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். இதன்படி, கிறிஸ்தவ மக்கள், அடக்குமுறை இல்லாமல் தமது விசுவாசத்தை பின்பற்ற அனுமதியளிக்கப்பட்டனர். கிறிஸ்தவ போதகம் செய்ததற்கான தண்டனைகள் இரத்து செய்யப்பட்டன. இதற்காக, பலர் மறைசாட்சியாக உயிர்த்தியாகம் செய்திருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திருச்சபையின் சொத்துக்கள் திருப்பித் தரப்பட்டன. கிறிஸ்தவம் மட்டுமல்லாது, பிற மத மக்களுக்கும் அவர்களது விசுவாசத்தை பின்பற்றும் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
“பிளேவியஸ் வலேரியஸ் கான்ஸ்டன்ஷியஸ்” (Flavius Valerius Constantius) எனும் இயற்பெயர் கொண்ட இவரது தந்தையார், ஒரு ரோமன் இராணுவ (Roman Army officer) அதிகாரியான “பிளேவியஸ் கான்ஸ்டன்ஷியஸ்” (Flavius Constantius) ஆவார். இவரது தாயாரான “புனிதர் ஹெலெனா” (Saint Helena of Constantinople) ஒரு கிரேக்க பெண்மணியாவார். “கிழக்கு மரபுவழி திருச்சபையும்” (Eastern Orthodox Church), “ஓரியண்டல் மரபுவழி திருச்சபையும்” (Oriental Orthodox Church) இவரை புனிதராகப் போற்றுகின்றன.
ஆட்சி:
பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் ரோமானிய பேரரசின் பல நிர்வாக, நிதி, சமூக, மற்றும் இராணுவ சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டது. மேலும் அரசு, குடிமையில் மற்றும் இராணுவ அதிகாரங்கள் தனித்தனியே பிரித்து மறு சீரமைக்கப்பட்டது. மேலும் அப்போதே பணவீக்கத்தை கட்டுப்படுத்த சொலிடுஸ் என்ற ஒரு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பைசண்டைன் மற்றும் ஐரோப்பிய நாணயங்களின் பொதுவான நாணயமாக பயன்பட்டது. உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளை எதிர்கொள்வதற்காக ரோமானிய இராணுவத்தில் தரவரிசை முறையில் வகைப்படுத்தி படைகளை பலப்படுத்தினர். கான்ஸ்டன்டைன் முந்தைய நூற்றாண்டின் உள்நாட்டு கலகத்தின் கைவிடப்பட்ட ரோமன் எல்லைகளை பழங்குடியினரிடமிருந்து வெற்றிகரமாக மீட்டார். கான்ஸ்டன்டைன் 324ல் பேரரசர்கள் மசேந்தியஸ் மற்றும் லிசினுஸ் ஆகியோருக்கு எதிரான உள்நாட்டு போர்களை வென்றதன் காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு ரோமின் ஒரே ஆட்சியாளரானார்.
கான்ஸ்டன்டைன் பண்டைக் கிரேக்கக் குடியேற்றமான பைசன்டியத்தை பேரரசின் தலைநகரமாக ஆக்கினார். அவர் காலத்தில் புதிய ரோம் என பெயரிடப்பட்ட இது பின்னர், அவர் பெயரால் கான்ஸ்டன்டினோப்பிள் என்று அழைக்கப்பட்டது. இது பைசன்டைன் பேரரசின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருந்தது. இதன் காரணமாக, அவர் பைசண்டைன் பேரரசின் நிறுவனர் என்று அழைக்கபடுகின்றார். அவரது அரசு அவருக்கு பின் வந்தவர்களால் தழைத்தோங்கியது.
அவர் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் ஒரு முன்மாதிரி மற்றும் சட்டப்பூர்வ பேரரசின் முன்னோடி என்று கூறப்பட்டார். ஆனால் சில விமர்சகர்கள் அவரை ஒரு கொடுங்கோல் அரசனாகவும் அவர் தன் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்க்காக நடித்தார் என்றும் கூறுகின்றனர்.
மத கொள்கை:
கிறிஸ்தவம் வரலாற்றில் கான்ஸ்டன்டைன் – முதல் கிறிஸ்தவ பேரரசர் ஆவர். இயேசுவின் கல்லறை உள்ளதாக நம்பப்படும் ஜெருசலேம் நகரில் அவரது உத்தரவின் பேரில் புனித செபுல்ச்ரே திருச்சபை கட்டப்பட்டது. திருத்தந்தைகள் கான்ஸ்டன்டைன் மூலம் பெரிய அளவில் அதிகாரங்களைப் பெற்றனர்.
கடைசி காலம்:
கான்ஸ்டன்டைன் அவரது மரணத் தருவாயில் புனித அப்போஸ்தலர் தேவாலயம் அருகே ரகசியமாக கல்லறை கட்டி தயாராக வைக்க சொன்னார். அவரது மரணம் அவர் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே வந்தது. கி.பி. 337ம் ஆண்டு, ஈஸ்டர் விருந்திற்கு பின்னர் கான்ஸ்டன்டைன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். பின்னர் கான்ஸ்டான்டினோபிள் திரும்ப அவர் முயற்சித்தார். அவர் தனக்கு திருமுழுக்கு அளிக்கப்பட வேண்டும் என கேட்டார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் அதற்கு முன்பே அச்சிரோனில் 337ம் ஆண்டு, மே மாதம், 22ம் நாளன்று, பாஸ்கா பண்டிகையை தொடர்ந்து பெந்தகோஸ்து ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் கான்ஸ்டன்டைன் இறந்தார்.
Comments are closed.