நாங்கள் எங்கள் மக்களைவிட்டு வெளியேற மாட்டோம்
இரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீதான அழிவுகரமான படையெடுப்பைத் தொடரும் நிலையில் கீவ் நகரிலுள்ள கத்தோலிக்க மறைப்பணியாளர் ஒருவர் பங்கு மக்களுக்கு ஆன்மீக மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.
இரஷ்ய இராணுவப் பீரங்கிகள் உக்ரேனிய நகரங்களைத் தாக்கும் இந்தப் பயங்கரமான நிலையிலும்கூட OMI என்ற அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் Pavlo Vyshkovskyi அவர்கள், தனது பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட தன் மக்களைக் கைவிடும் நிலையில் இல்லை என்பதை, வத்திக்கான் செய்தியிடம் பேசியபோது உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
மறைப்பணியாளர் Vyshkovskyi அவர்கள், இப்போது தலைநகர் கீவில் உள்ள புனித நிக்கோலஸ் கத்தோலிக்க ஆலயத்தின் பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார்.
கீவ் நகரில் உள்ள அவரது பங்கிலிருந்து வத்திக்கான் செய்தி துறைக்குப் பேசிய அருள்பணி Pavlo அவர்கள், தனது துறவு சபை, மக்களுக்கு உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருவதோடு, போரின் கொடூரங்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கு ஆன்மீக ஆறுதலையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்ட நிலையில் ஒவ்வொரு இரவும் இதுதான் கடைசியாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்வதாகவும், அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பெற்றோரையும், குழந்தைகளையும், உறவினர்களையும் இழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ள அருள்பணி பாவ்லோ அவர்கள், உக்ரைனுக்காக இறைவேண்டல் செய்யுமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக மார்ச் 8, இச்செவ்வாயன்று ஐநா கூறியுள்ள நிலையில், OMI சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்கள் பலர் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறவும் உதவிவருகின்றனர்.
Comments are closed.