புலம்பெயரும் அன்னையர்களுக்காக திருத்தந்தை செபம்

போர்களுக்கு அஞ்சி, தங்களின் பிள்ளைகளோடு புலம்பெயரும் அன்னையர்களுக்காக, அன்னை மரியாவிடம் மன்றாடுகிறேன் என்று, அனைத்துலக மகளிர் நாளாகிய மார்ச் 08, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து செபிப்போம், மார்ச் 8 என்ற ஹாஷ்டாக்குகளுடன் (#PreghiamoInsieme #Ucraina #8march) தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “கரங்களில் தன் மகன் இயேசுவைத் தாங்கியிருக்கும் மரியாவை நோக்கியவண்ணம், போர்கள், மற்றும், வறட்சியினால் தங்களின் பிள்ளைகளோடு புலம்பெயர்கின்ற, மற்றும், புலம்பெயர்ந்தோர் முகாம்களில் காத்திருக்கும் இளம் அன்னையரை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் பலராய் உள்ளனர். அமைதியின் அரசியாம் அன்னை மரியா, நம் இதயங்களிலும், உலகமனைத்திலும் நல்லிணக்கத்தைக் கொணர்வாராக” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

அனைத்துலக மகளிர் நாள்

2022ஆம் ஆண்டின் அனைத்துலக மகளிர் நாள், நிலையான உலகத்திற்காக இன்றைய பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டது.

1977ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அனைத்துலக மகளிர் நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 1848ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமைநிலையை எதிர்த்து இடம்பெற்ற போராட்டங்களின்போது பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களும் வலுப்பெற்றன. 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியன்று, அமெரிக்காவில், முதல் மகளிர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

செபக் கருத்தை மையப்படுத்தி டுவிட்டர் செய்தி

மேலும், “புதிய உயிரிஅறநெறிச் சவால்களை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம், அவர்கள் இறைவேண்டல் மற்றும், செயல்களினால் அனைத்து மனித மாண்பையும் தொடர்ந்து பாதுகாப்பார்களாக” என்ற வார்த்தைகள், திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

Comments are closed.