தவக் காலத்தின் முதல் ஞாயிறு (06.03.2022)

“கடவுளின் துணையால் சோதனையை வெல்வோம்”
இயேசு இதயத்தில் இருக்கின்றார்:
இடைக்காலத்தில் மார்ட்டின் என்றொரு துறவி இருந்தார். அவர் தனக்கு வந்த சோதனைகளை மிக எளிதாக வென்று வந்தார். இது அவரோடு இருந்த மற்ற துறவிகளுக்கு வியப்பைத் தந்தது.
“நீங்கள் மட்டும் உங்களுக்கு வருகின்ற சோதனைகளை மிக எளிதாக வெற்றி கொள்கிறீர்களே! அது எப்படி?” என்று மற்ற துறவிகள் அவரிடம் கேட்டபோது, அவர் அவர்களிடம், “சாத்தான் என்னைச் சோதிப்பதற்காக என்னுடைய இதயக் கதவைத் தட்டி, ‘உள்ளே யார் இருக்கின்றார்?’ என்று கேட்கும். அப்போது நான் என் இதயக் கதவைத் திறக்க மாட்டேன். மாறாக, என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் இயேசு, என் இதயக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, ‘உள்ளே மார்ட்டின் என்று ஒருவன் இருந்தான். இப்போது அவன் வெளியே போய்விட்டான். அதனால் நான்தான் உள்ளே இருக்கின்றேன்’ என்று சொல்லி, தன்னுடைய கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஆணிகளால் ஏற்பட்ட காயங்களைக் காட்டுவார். அவற்றைப் பார்த்ததும், சாத்தான் தலைதெறிக்க ஓடிவிடும். இப்படித்தான் நான் எனக்கு வரும் சோதனைகளை வெற்றி கொள்கிறேன்” என்றார்.
ஆம், நம்முடைய இதயத்தில் ஆண்டவரைக் குடியமர்த்துகின்றபோது அல்லது ஆண்டவர் நம்முடைய இதயத்தில் குடிகொள்கின்றபோது, நமக்கு வரும் சோதனைகளை நாம் மிக எளிதாக வென்றிடலாம். தவக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளின் துணையால் சோதனையை வெற்றி கொள்வோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
சோதிக்கப்பட்ட இயேசு:
‘சோதனைக்கு உள்ளாகாதவர் மனிதரும் அல்லர்; சோதனையை வெல்லாதவர் மனிதரே அல்லர்’ என்ற கூற்றிற்கு ஏற்ப, நற்செய்தி வாசகத்தில், மனுவுருவான ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். சாத்தானால் இயேசு பசி, குறுக்கு வழியில் மாட்சி அடைதல், இறைவனைத் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைத்தல் ஆகிய மூன்று விதமான சோதனைகளுக்கு உள்ளாகின்றார்.
ஆதாமும் ஏவாளும், அதன்பிறகு பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கும் பசியினால் சோதனைக்கு உள்ளாகி, ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து நாற்பது நாள்கள் நோன்பிருந்து பசியோடு இருந்தபோதும், சாத்தானுடைய சோதனையில் விழுந்துவிடாமல், “மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கிறார்” (இச 8:3) என்று சொல்லி, சாத்தானின் சோதனையை முறியடிக்கின்றார்.
இரண்டாவதாக, சாத்தான் இயேசுவுக்கு வைத்த சோதனை: குறுக்கு வழியில் மாட்சியை அடைவது. கடவுளின் திருவுளம், இயேசு பாடுகள் பட்டு, இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், சாத்தான், அதெல்லாம் வேண்டாம், “நீ என்னை வணங்கினால், அனைத்தும் உம்முடையதாகும்” என்கிறது. உடனே இயேசு, இன்றைக்கு ஒருசிலர் குறுக்கு வழியில், எந்தவொரு துன்பத்தையும் அனுபவிக்காமல் உயர்ந்த நிலையை அடைவது போன்று, சாத்தான் சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிந்து மாட்சியை அடைந்துவிடவில்லை. மாறாக, அவர் கடவுளின் திருவுளத்திற்கேற்ப பாடுகள் படத் தயாராகின்றார். அதனால் அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணிசெய்வாயாக” (இச 6:13) என்று சொல்லி, சாத்தானின் இரண்டாவது சோதனையை முறியடிக்கின்றார்.
மூன்றாவதாக, சாத்தான் இயேசுவுக்கு முன்பாக வைத்த சோதனை, கடவுளைத் தன்னுடைய விரும்பத்திற்கேற்ப வளைப்பது. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் திருவுளத்திற்கேற்ப நடக்கவேண்டும். அதுவே சிறப்பானதாகும். ஆனால், பலர் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காமல், ‘கடவுளே எனக்கு நீர் இதைச் செய்து தரவேண்டும்’, ‘என்னுடைய வாழ்வில் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்’ என்று கடவுளைத் தங்களுடைய விருப்பத்திற்கு இழுப்பதைக் காண முடிகின்றது. இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, சாத்தான் தன்னிடம் எருசலேம் திருக்கோயிலின் மேலிருந்து கீழே குதியும் என்று சொன்னபோது, அவர் அவ்வாறு செய்யாமல், “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்” (இச 6:16) என்று சொல்லி, கடவுளின் விரும்பத்திற்கேற்ப நடந்து, சாத்தானின் சோதனையை முறியடிக்கின்றார். இவ்வாறு இயேசு சாத்தான் தனக்கு வைத்த மூன்று சோதனைகளையும் இறைவனின் துணையால், இறைவார்த்தையின் துணையால் முறியடிக்கின்றார்.
சோதனையின்போது இறை உதவியை நாடவேண்டும்:
‘இயேசு இறைமகன், அதனால் அவரால் சோதனையை மிக எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது. சாதாரண மனிதர்களாகிய நம்மால் சோதனையை வெற்றிகொள்ள முடியுமா?’ என்ற கேள்வி நமக்கு எழலாம். மனிதர்கள் தங்கள் சொந்த ஆற்றலை மட்டுமே நம்பி இருந்தால், அவர்களால் தங்களுக்கு வருகின்ற சோதனையை வெற்றி கொள்ள முடியாதுதான். ஆனால், கடவுளின் துணையால் நம்மால் சோதனையை வெற்றி கொள்ள முடியும். இது குறித்து எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்போது, “தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்ய இயேசு வல்லவர்” (எபி 2:18) என்கிறார்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியருடைய கூற்றுப்படி, இயேசு சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதால், அவர் யாரெல்லாம் சோதனைக்கு உள்ளாகுகின்றார்களோ, அவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராக இருக்கின்றார். அதற்கு நாம் அவருடைய உதவியை நாடவேண்டும். அவருடைய உதவியின்றி நம்மால் சோதனையை வெல்ல முடியாது.
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வேண்டும் என்று சொன்னாலும், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் துன்பப்பட்டபோது, அவர்கள் தங்கள் மூதாதையரின் கடவுளை நோக்கிக் குரல் எழுப்பியபோது, கடவுள் அவர்களுடைய குரலைக் கேட்டு, அவர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் என்ற செய்தியைத் தாங்கிவருகின்றது. எனில், நாம் துன்பங்களுக்கு உள்ளாகின்றபோதும், சோதனைக்கு உள்ளாகின்றபோதும், கடவுளின் உதவியை நாடவேண்டும். அப்போது அவர் நமக்கு உதவுவார்.
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டோர் அவமானம் அடையார்
‘நாம் சோதனைக்கு உள்ளாகின்றபோது, ஆண்டவருடைய உதவியை நாடினால் மட்டும் போதுமா, வேறு எதுவும் செய்யத் தேவை இல்லையா?’ என்ற கேள்வி எழலாம். நாம் சோதனைக்கு உள்ளாகின்றபோது ஆண்டவருடைய உதவியை நாட வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு நாடவேண்டும். அதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் தெளிவாகக் கூறுகின்றார்.
‘கடவுள் ஒருவரே’ என்பதைப் பேய்களும் நம்புகின்றன. அத்தகைய நம்பிக்கை தேவை இல்லை. செயலில் வெளிப்படும் நம்பிக்கையே தேவை (யாக் 2:19-20). என்று யாக்கோபு தனது திருமுகத்தில் கூறுவார். செயலில் வெளிப்படும் நம்பிக்கையைத்தான் பவுலும் எதிர்பார்க்கின்றார். அதனால்தான் அவர், “இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்” என்கிறார். இப்படி உயிர்த்த இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு, அவரோடு உயிர்த்தெழும் ஒவ்வொருவரும் மேலுலகு சார்ந்தவற்றை நாடுவர் (கொலோ 3:1). அதனால் அவர்கள் தமக்கு வரும் சோதனையை மிக எளிதாக முறியடிப்பர். இதன்மூலம் “நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” (எசா 8:16) என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை உண்மையாக்குவர்.
ஆகவே , நாம் சோதனைக்கு உள்ளாகும்போது இறை உதவியை நம்பிக்கையோடு நாடி, சோதனைகளை மிக எளிதாக வெல்வோம்.
சிந்தனைக்கு:
‘நாம் வீழ்ந்துபோக வேண்டும் என்பதற்காகச் சோதனைகள் வருவதில்லை. மாறாக, அவற்றை நாம் வென்று, முன்பைவிட ஆற்றல் மிக்கவர்களாக வரவேண்டும் என்பதற்காகவே சோதனைகள் நமக்கு வருகின்றன’ என்பார் திருவிவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே. எனவே, நாம் நமக்கு வரும் சோதனைகளை வென்று, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.