இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
“இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.” என ஆண்டவர் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கூறியதை இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம்.
‘தேர்ந்தெடுத்தல்’ என்ற சுகந்திரத்தை ஆண்டவர் தம் மக்களுக்கு என்றுமே வழங்கியுள்ளார். அந்த சுகந்திரத்தை நாம் நல்ல வழியில் பயன்படுத்தி ‘நிலைவாழ்வு’ என்னும் பேற்றினை அடைய இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
“நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;” என இன்றைய பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட திருப்பாடல் 1:1-ல் கூறப்பட்டுள்ளது.
பொல்லார், பாவிகள், இகழ்வோர் ஆகியோரை தூய ஆவியின் துணை கொண்டு, இனம் கண்டு கொண்டு அவர்களிடம் இருந்து விலகி இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்பபோம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து
இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
“என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
உலகம் முழுவதும் இறைப்பணிக்காக உயிர் நீத்த மற்றும் தற்போது துன்புற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் செப, தப முயற்சிகள் அனைத்தும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
உக்ரைன் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவும், அங்கு அமைதியான இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.