தலைமுறைகளுக்கிடையே நல்லிணக்கம் இன்றியமையாதது

திருஅவையில் தவக்காலம் தொடங்கியுள்ளது. சாம்பல் புதனாகிய இன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில், உலகளாவியத் திருஅவையில், உக்ரைன் மற்றும், உலகின் அமைதிக்காக, இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு ஆகிய பக்திமுயற்சிகள் கடைப்பிடிக்கப்பட்டன. இப்புதன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, முதுமைபற்றிய தன் இரண்டாவது பகுதியை வழங்கினார். திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் துவக்குவதற்குமுன்னர், முதல் மனிதர் ஆதாமின் நீடியஆயுள்பற்றிக் கூறும் பகுதி ஒன்று, தொடக்க நூலிலிருந்து வாசிக்கப்பட்டது.

ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.  அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.   ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான். சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான். (தொ.நூ.5,1-5)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். விவிலியத்தில் மூதாதையர் பட்டியல்பற்றி பதிவுசெய்யப்பட்டுள்ள பகுதியை வாசிக்கும்போது, அவர்களின் மிக நீண்ட ஆயுள் காலம் நம்மை உடனடியாக வியப்பில் ஆழ்த்துகிறது. முதுமை எப்போது தொடங்குகிறது? இந்தப் பழங்காலத் தந்தையர்கள், பிள்ளைகளுக்குத் தந்தையரானபின், நீண்ட காலம் வாழ்ந்திருப்பதன் முக்கியத்துவம் என்ன? தந்தையரும் பிள்ளைகளும் நூற்றாண்டுகளாக ஒன்றுசேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனரே! போன்றவை குறித்து நூற்றாண்டுகளாகவும் நாம் பேசிவருகிறோம். நூற்றாண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவிலியப் பகுதி, நீடிய ஆயுளுக்கும், மூதாதையர் பட்டியலுக்கும் இடையேயுள்ள உறவில் ஓர் ஆழமான அர்த்தத்தை வழங்குகிறது. படைப்பு வரலாற்றின் துவக்கத்தில், ஆன்மா, வாழ்வு, மனச்சான்று, சுதந்திரம்  உணர்வுத்திறன், கடமையுணர்வு என, அனைத்துமே புதியனவாக இருந்துள்ளன. இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம், மற்றும், அதன் மதிப்புபற்றிய நம் மறைக்கல்வியுரையில், உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு, முதுமைநிலை எத்தகைய பங்கை ஆற்றமுடியும் என்பது குறித்து இன்று சிந்திப்போம். இத்தகைய ஒரு சமுதாயத்திற்கு, எல்லா வயதினருமே ஏதாவது ஒன்றை வழங்க இயலும். வயது முதிர்ந்தோர், வாழ்வின் அர்த்தம் என்ன என்பது குறித்து  நமக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அவர்களின் முதிர்ந்த வயது, ஞானமுள்ளது, காலம் காலமாகப் பக்குவம் அடைந்திருப்பது. அதனால், வெகு வேகமாக வளர்ந்துவரும் இக்காலச் சமுதாயத்தால் எழுப்பப்படும் புதிய புதிய கேள்விகள், மற்றும், சவால்களை நாம் எதிர்கொள்வதற்கு, அவர்களால் நமக்கு உதவ முடியும். இக்காரணத்தினால், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோரைக் கவுரவப்படுத்துவதற்கென்று, ஜூலை மாதத்தில், ஒரு சிறப்பு நாளை உருவாக்க விரும்பினேன். நலமான ஒரு சமுதாய வாழ்வுக்கு இன்றியமையாததாக அமைந்துள்ள இளையோருக்கும் வயதுமுதிர்ந்தோருக்கும்  இடையேயுள்ள பிணைப்பு, இன்றையப் பரபரப்பான வாழ்வுக்கு மத்தியில், ஆண்களும் பெண்களும் இறைச்சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதையும், நமது வாழ்வை ஒன்றுசேர்ந்து முழுமையாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவுபடுத்தி,  நம் மத்தியிலுள்ள, இறைப்பிரசன்னத்தைக் கண்டுணர நமக்கு உதவ முடியும். அதோடு, நம் சகோதரர் சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள அது உதவும்.

இவ்வாறு நீடியஆயுள்பற்றிய இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மத்தியில் வயதுமுதிர்ந்தோர் வாழ்வதன் முக்கியத்துவத்தை நாம் ஏற்போமாக, உண்மையான சீரான வாழ்வுமுறை அவர்களுடையதே என்பதையும்,  தலைமுறைகளுக்கு இடையே நிலவவேண்டிய நல்லிணக்க உறவுகள் தங்குதடையின்றி தொடர அவர்கள் உதவுவதையும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோமாக என்று கூறினார். மேலும், போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்கு வாழ்த்துக் கூறியபோது, உக்ரைன் நாட்டுப் புலம்பெயர்ந்தோருக்கு போலந்து நாடு உதவிவருவதற்கு, தன் நன்றியையும், பாராட்டையும் திருத்தந்தை தெரிவித்தார். பின்னர் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவுவதற்காக, இறைவேண்டல், மற்றும், உண்ணாநோன்போடு இன்று நாம் தொடங்கியிருக்கும் தவக்காலப் பயணம், தூய்மைப்படுத்தப்பட்ட இதயங்களோடு, கிறிஸ்து உயிர்ப்பின் மகிழ்விற்கு நம்மை இட்டுச்செல்வதாக என்றுரைத்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.