மார்ச் 3 : நற்செய்தி வாசகம்

என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————
“வாழ்வையும் சாயும் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்”
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் வியாழக்கிழமை
I இணைச்சட்டம் 30: 15-20
II லூக்கா 9: 22-25
“வாழ்வையும் சாயும் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்”
புனித அகுஸ்தினின் இறைவேண்டல்:
புனித அகுஸ்தின் தனது முழுஉண்மையை நோக்கிய பயணத்தின் தொடக்கத்தில் கடவுளிடம் இவ்வாறு வேண்டினார்: “கடவுளே! என்னுடயை பாவங்களிலிருந்து என்னை விடுவித்துக் காத்தருளும்; ஆனால் உடனடியாக அல்ல.” நாள்கள் மெல்ல நகர்ந்தன. அப்பொழுது அவர் கடவுளிடம் கீழ்கண்டவாறு வேண்டினார்; “கடவுளே! ஒரு பாவத்தைத் தவிர, மற்றெல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும்.”
இன்னும் நாள்கள் நகர்ந்தன. ஒருநாள் அவர் கடவுளிடம், “கடவுளே! இப்பொழுதே நீர் என்னுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும்” என்று வேண்டினார். எப்பொழுது அவர் கடவுளிடம் இவ்வாறு வேண்டினாரோ, அப்பொழுதோ அவர் புதிய மனிதராக மாறி, புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
ஆம், புனித அகுஸ்தின் எப்பொழுது கடவுளிடம், “இப்பொழுதே நீர் என்னுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும்” என்று வேண்டினாரோ அப்பொழுதே அவருக்குப் புது வாழ்வு மலர்ந்தது. நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது தீர்மானங்களைப் பொறுத்துத்தான் நமது உயர்வும் தாழ்வும் அடங்கியுள்ளன என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துரைக்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களிடம், உனக்கு முன்பாக வாழ்வையும் சாவையும் வைத்துள்ளேன் என்று சொல்லிவிட்டு, ஆண்டவரின் குரலைக் கேட்டு நடந்தால் வாழ்வடைவாய்; அவர் குரலைக் கேளாமல், வேற்று தெய்வங்களை வழிபட்டால் அழிந்து போவாய் என்கின்றார்.
நற்செய்தியில் இயேசு, தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புவோர் அதை இழந்துவிடுவார்; மாறாக என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் என்கின்றார். அப்படியெனில், நாம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கைகொண்டு வாழ்ந்தோமெனில், நாம் அவர் தருகின்ற ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம். அதே நேரத்தில் நாம் ஆண்டவரின் குரலைக் கேளாமலும், அவர்மீது நம்பிக்கை வைத்து வாழாமலும் இருந்தால், அவரிடமிருந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதி (யோவா 3: 36).
சிந்தனைக்கு:
 நமது உயர்வும் தாழ்வும் நாம் ஆண்டவர்மீது வைக்கும் நம்பிக்கையைப் பொறுத்து உள்ளது.
.
 ஆண்டவரைத் தேடினால் வாழ்வடைவோம் (ஆமோ 5: 6).
 ஆண்டவரே நமது வாழ்வாக இருக்கும்பொழுது, வேறு எதைத் தேடி, யாரைத் தேடி நாம் செல்லவேண்டும்?
இறைவாக்கு:
‘அவரைச் சார்ந்துதான் வாழ்கின்றோம்; இயங்குகின்றோம் இருக்கின்றோம்’ (திப 17: 28) என்பார் புனித பவுல். எனவே, நம்முடைய வாழ்வின் எல்லாமுமாக இருக்கும் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.