தவறு செய்யும் சகோதரர்களை கருணைப் பார்வையுடன் நோக்குங்கள்
மற்றவர்களை நாம் எவ்வாறு தீர்ப்பிடுகிறோம் என்பது குறித்து, இயேசு எடுத்துரைக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி, நம்மை நாம் எவ்வாறு பார்க்கிறோம், அதேவேளை மற்றவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பது குறித்து ஆழமாக சிந்திக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பலவேளைகளில் மற்றவர்களின் குறைகளை நோக்குவதற்கே முக்கியத்துவம் வழங்குகிறோமேயொழிய, நம் குறைகளை நோக்குவதில்லை என்பதை எடுத்துரைத்து, பிறர் கண்ணில் உள்ள துரும்பைக் குறித்து குறைகூறும் நாம், நம் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைக் காண மறுப்பதேன் என்ற இயேசுவின் கேள்வியை முன்வைத்தார்.
பிறரைக் குற்றம் சுமத்த ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டிருக்கும் நாம், நம் தவறுகளை நியாயப்படுத்த தயங்குவதில்லை என்ற கருத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தின் மீது, திருஅவையின்மீது, மற்றும் உலகின் மீது கேள்விகளை எழுப்பும் முன்னர், நம்மை முதலில் மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
கண்மூடித்தனமாக மற்றவர்கள் மீது குறைகாணும்போது, மற்றவர்களுக்கான ஆசிரியராகவோ, வழிகாட்டியாகவோ நம்மால் செயல்படமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்முடைய பலவீனங்களை நாம் ஏற்றுக்கொண்டு செயல்படும்போதுதான், இறை இரக்கத்தின் கதவுகள் நமக்குத் திறக்கப்படும் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, அதன்பின் நாமும் தவறு செய்யும் சகோதரர்களைக் கருணைப் பார்வையுடன் நோக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடவுள் நம்மை மன்னிப்பதுபோல், நாமும் பிறரை மன்னிக்கவேண்டும், ஏனெனில் பிறரின் தீமைகளைப் பார்ப்பவர்களாக அல்ல, மாறாக, பிறரில் காணப்படும் நன்மைத்தனங்களை நோக்குபவர்களாக நாம் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் நாம், நம் வார்த்தைகளிலும் கவனமாக இருக்கவேண்டும், ஏனெனில், நம் இதயத்தை வெளிப்படுத்துவதாக நம் வார்த்தைகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வார்த்தைகள் கத்தியைவிட கூர்மையானவை என்பதால், வார்த்தை பயன்பாட்டில் கவனமாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
மற்றவர்களின் மீதான அக்கறையை, மதிப்பை, புரிந்துகொள்ளுதலை, நெருக்கத்தை, மற்றும் இரக்கத்தை வெளிப்பளிப்படுத்தும் வார்த்தைகளையே வாழ்வில் பயன்படுத்துவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்து தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.