ரஷ்யத் தூதரகத்தில் உக்ரைன் குறித்து திருத்தந்தை கவலை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 25, இவ்வெள்ளி நண்பகல் வேளையில், உரோம் நகரிலுள்ள, திருப்பீடத்திற்கான இரஷ்யத் தூதரகத்தின் தலைமையகத்திற்குச் சென்று, அரை மணி நேரத்திற்கு மேலாக, அத்தூதரகத்தில் செலவிட்டு, உக்ரைன் நாடு குறித்த தன் கவலையைத் தெரிவித்தார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில், பிப்ரவரி 24, இவ்வியாழனன்று போர் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அது குறித்த தன் கவலையை வெளிப்படுத்துவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு அருகில், கொன்சீலியாஸ்ஸியோனே (Conciliazione) சாலையில் அமைந்துள்ள இரஷ்ய தூதரகத்திற்குச் சென்றார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.
பிளாரன்ஸ் பயணம் இரத்து
மேலும், பிப்ரவரி 27, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிளாரன்ஸ் நகருக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்துசெய்யப்பட்டது என்றும், மார்ச் 2ம் தேதி திருநீற்றுப் புதன் திருவழிபாட்டை, அவர் தலைமையேற்று நடத்தமாட்டார் என்றும், மத்தேயு புரூனி அவர்கள், இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளார்
திருத்தந்தைக்கு, முழங்காலில் ஏற்பட்டுள்ள கடும் வலி காரணமாக ஓய்வுதேவை என்று, அவரது மருத்துவர் பரிந்துரைத்ததால், திருத்தந்தையின் பிளாரன்ஸ் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது, மற்றும், திருநீற்றுப் புதன் திருவழிபாட்டை, அவர் தலைமையேற்று நடத்தமாட்டார் என்று, புரூனி அவர்கள் தெரிவித்துள்ளார்
Comments are closed.