பிப்ரவரி 27 : நற்செய்தி வாசகம்
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
“சொல், உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது”
பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறு
I சீராக்கின் ஞானம் 27: 4-7
II 1கொரிந்தியர் 15: 54-58
III லூக்கா 6: 39-45
“சொல், உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது”
சொல்லில் கவனம்:
அது நகரில் இருந்த அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வேகமாக நுழைந்த மருத்துவரைத் தடுத்து நிறுத்தினார் அன்றைய நாளில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருந்த சிறுவனின் தந்தை. “என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீங்கள் இப்படிப் பொறுப்பே இல்லாமல், இவ்வளவு தாமதமாக வருவீர்களே!” என்று கத்தினார் சிறுவனின் தந்தை. அதற்கு மருத்துவர் அவரிடம், “ஐயா! தயவுசெய்து பதற்றப்பட வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று பொறுமையோடு பதிலளித்துவிட்டு முன்னோக்கி நகர்ந்தார் மருத்துவர். “பதற்றப்பட வேண்டாம் என்று எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். உங்களுடைய மகனுக்கு இப்படி நடந்திருந்தால் இவ்வாறு பேசுவீர்களா?” என்று சீற்றம் குறையாமல் கத்தினார் சிறுவனின் தந்தை. அவரை கூர்ந்து பார்த்துவிட்டு அறுவைச் சிகிச்சை அறைக்குள் வேகமாக நுழைந்தார் மருத்துவர்.
ஏறக்குறைய ஒருமணி நேரம் கழித்து, அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், சிறுவனின் தந்தையிடம், “உங்களுடைய மகனுக்கு அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடந்து முடிந்திருக்கின்றது. அது குறித்து வேறு ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், செவிலியரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார். அப்போதும் சிறுவனின் தந்தைக்குச் சினம் அடங்கவில்லை. ‘என்ன மாதிரியான மருத்துவர் இவர்! சிறிதுநேரம்கூடப் பொறுமையாகப் பேசமாட்டேன் என்கிறீராரே! சரியான திமிர் பிடித்தவர்’ என்று அவரைத் தன் மனத்திற்குள் திட்டித் தீர்த்தார் சிறுவனின் தந்தை.
அந்நேரத்தில் செவிலியர் அங்கு வந்தார். அவரிடம் தன்னுடைய ஆற்றாமையைச் சிறுவனின் தந்தை கொட்டித் தீர்த்தபோது, செவிலியர் அவரிடம், “நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் மருத்துவரின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவனுடைய இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோதுதான், நாங்கள் உங்களுடைய மகனுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைப் பற்றிச் சொன்னோம். அவர் சிறிதும் தாமதிக்காமல் இங்கு வந்து அறுவைச் சிகிச்சையை நடத்திக் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றார். இது எதுவுமே தெரியாமல் இப்படியெல்லாம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கின்றீர்களே!” என்றார். அப்போதுதான் சிறுவனின் தந்தைக்குத் தன் தவறு புரிந்தது. அவர், மருத்துவரிடம் தான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக மிகவும் வருந்தினார்.
ஆம், பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவனின் தந்தையைப் போன்று ஒருவரின் சூழ்நிலை என்ன என்ற தெரியாமல் கடுமையாக சொற்களை உதிர்த்து விடுகின்றார்கள். பின்னர் அதை நினைத்துப் பெரிதும் வருந்துகிறார்கள். பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், “பேச்சைக் கொண்டே ஒருவரை அறிந்துகொள்ளலாம்” என்கிறது. நமது பேச்சு எப்படி இருக்க வேண்டும், அதன்மூலம் நாம் எப்படிக் கனிதரும் வாழ்க்கை வாழவேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
சொற்கள், உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி:
செவ்விந்தியர்களிடம் ஒரு வழக்கம் இருக்கின்றது. அவர்கள் வேட்டையாடச் செல்கின்றபோது, தங்களோடு எடுத்துச் செல்லும் ஆயுதங்களை எக்காரணத்தைக் கொண்டும் தவறவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்ற ஆயுதங்களைத் கீழே தவற விட்டுவிட்டால், அவற்றை அவர்கள் எப்படியாவது எடுத்துவிட்டுத்தான் வீடு திரும்புவார்கள். காரணம், அவர்கள் தவற விட்ட ஆயுதம் அவர்களுடைய எதிரிகளின் கையில் அகப்பட்டால், அதுவே அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால்! “ஆயுதங்களைவிடவும் சொற்கள் வலிமையானவை. அதனால் அவற்றை வீணாகச் சிந்திவிடக் கூடாது” என்பார் சாகித்ய அகடாமி விருது பெற்ற எஸ். இராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “மனிதரின் பேச்சில் மாசு படிந்திருக்கின்றது; பேச்சைக் கொண்டே ஒருவரை அறிந்துகொள்ளலாம்” என்கிறது. மனிதர்கள் முழுமையானவர்கள் கிடையாது. அதனால் அவர்களுடைய பேச்சில் நிச்சயம் மாசு படிந்திருக்கும். ஆகவே, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போன்று யாரையும் தீர்பிடக் கூடாது அல்லது யாரைப் பற்றியும் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், மாசு படிந்துள்ள மனிதரின் பேச்சு மற்றவரைக் காயப்படுத்தும்! இதனாலேயே மனிதர்கள் தங்கள் சொற்களைக் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அழிவுக்குரியது அழியாமை அணிந்துகொள்ள வேண்டும்
வாழ்க்கை என்பது முழுமையை நோக்கிய ஒரு தொடர் தோட்டம். அந்த அடிப்படையில், முழுமையில்லாத மனிதர்கள் முழுமையை நோக்கி நகரவேண்டும்; அழிவுக்குரிய மனிதர்கள் அழியாமையை அணிந்துகொள்ளவேண்டும். இது பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றபோது, “அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்துகொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்” என்கிறார்.
அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளவேண்டும் என்று புனித பவுல் சொல்வதை, அழிந்து போகும் அல்லது மாசு படிந்த சொற்களைப் பேசும் மனிதர்கள், அழியாத நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தையாம் (யோவா 6:68) கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி வாழ்ந்தால், அவர்கள் அழியாமையையும் சாகாமையையும் அணிந்துகொள்ளலாம். அதன்மூலம் அவர்கள் மறைநூலில் எழுதியுள்ள வாக்கை நிறைவேற்றலாம் என்று புரிந்துகொள்ளலாம். அப்படியெனில் நிலைவாழ்வு அளிக்கும் கடவுளின் வார்த்தைகளை ஒருவர் கேட்பது, அதன்படி நடப்பது எவ்வளவு முதன்மையானவை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
மிகுந்த கனிதர வேண்டும்
“ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்” – இது இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற மிக முக்கியமான வார்த்தைகள். இங்கே கனி என்று சொல்வதை மனிதர்கள் பேசும் சொல்லோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனிதர்களின் சொல் என்ற கனியானது நல்ல கனியாக இருக்கவேண்டும். அதற்கு ஒருவர் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளை உள்வாங்கி, அதன்படி வாழவேண்டும். இதைப் பற்றி நாம் மேலே பார்த்தோம்.
எதற்காக மனிதரின் சொல் என்னும் கனி நல்ல கனியாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் மிகுந்த கனி தந்து இயேசுவின் சீடராக இருக்கவேண்டும் என்பதே தந்தைக்கு மாட்சி அளிக்கின்ற செயலாக இருக்கின்றது. எனவே, அழிவுக்குரியவர்களான நாம், அழியாத, நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகளால் நமது உள்ளத்தையும் வாழ்வையும் நிரப்புவோம். அப்படி நாம் நிரம்புகின்றபோது, நாம் ஆண்டவரில் நிலைத்திருப்போம். ஆண்டவரோடு அவரது அழியா வார்த்தைகளோடு நாம் நிலைத்திருக்கும்போது, நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா 15:7). இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
சிந்தனைக்கு:
‘நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்’ (நீமொ 10:11) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் நல்லவற்றைப் பேசி, நற்கனிகள் தருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.