வாசக மறையுரை (பிப்ரவரி 24)

பொதுக் காலத்தின் ஏழாம் வாரம்
வியாழக்கிழமை
I யாக்கோபு 5: 1-6
II மாற்கு 9: 41-50
“யாருடைய செல்வம் மக்கிப் போகும்?”
ஷாலுமன் மன்னரின் கல்லறை:
கி.பி 1000 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டை ஆண்ட ஷாலுமன் (Charliemagne) மன்னரின் கல்லறை திறக்கப்பட்டது. ஷாலுமன் மன்னர் 814 ஆம் ஆண்டு இறந்தார். அதன்பிறகு 186 ஆண்டுகள் கழித்து, அதாவது 1000 ஆம் ஆண்டு அவரது கல்லறை திறக்கப்பட்டது.
அவரது கல்லறையைத் திறந்து பார்த்தவர்கள் வியப்பில் மூழ்கினார்கள். காரணம், அவரது கல்லறையில் தங்கம், வைரம் என விலையுர்ந்த பொருள் நிறைந்து இருந்தன. அதைவிடவும் அவர் தலையில் கிரீடம் சூடி, சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் (எலும்புக் கூடாகத்தான்). அவருடைய கைவிரல் ஒன்று, மடியில் விரித்து வைக்கப்பட்டிருந்த திருவிவிலியத்தில், மாற்கு நற்செய்தி 8:36 இல் இடம்பெறும், “ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” என்ற இறைவார்த்தையில் வைக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து விட்டு ஒருவர், “பதவி, பணம், செல்வம் இப்படி எல்லாம் இருந்தும் என்ன பயன்? தன் வாழ்வைத் தொலைத்துவிட்டாரே இவர்!” என்றார்.
ஷாலுமன் மன்னரின் அழிந்துபோன உடலைப் பார்த்துச் சொல்லப்பட்டதுபோன்று, ஒருவர் தம் வாழ்வை இழந்த பின், அவர் சேர்த்து வைத்த செல்வத்தால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. இன்றைய இறைவார்த்தை கடவுள் கொடுத்த செல்வத்தை நல்லவிதமாய்ப் பயன்படுத்தவேண்டும். அப்படி நல்லவிதமாய்ப் பயன்படுத்தாதபோது அது எப்படி அழிந்து போகும் என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யாக்கோபு காலத்தில் வாழ்ந்த பணம் படைத்த சிலர், தங்களுக்குக் கீழ் வேலை செய்த கூலியாள்களுக்குச் சரியாகக் கூலி கொடுக்காமல், அவர்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் யாக்கோபு, “உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று; உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன” என்கிறார்.
நற்செய்தியில் இயேசு, ஒருவர் தன்னுடைய சீடர் என்பதற்காக அவருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என்கிறார்.
முதல் வாசகத்தில் யாக்கோபும், நற்செய்தியில் இயேசுவும் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை உணர்த்துகின்றன. ஒன்று, ஏழைகளில் இறைவன் இருக்கின்றார். ஆகவே, அவர்களை வஞ்சிப்போர் இறைவனை வஞ்சிக்கின்றார் என்பதாகும். இரண்டு, ஒருவர் தாம் பெற்ற செல்வத்தைத் தனக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் பயன்படுத்தவேண்டும் என்பதாகும். தாம் பெற்ற செல்வத்தைத் தனக்காகப் பயன்படுத்துவோரின் செல்வம் மக்கிப் போய்விடும். அதே நேரத்தில் தாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்காக, இயேசுவின் சீடருக்காகப் பயன்படுத்துவோர் சிறந்த கைம்மாறு பெறுவர்.
எனவே, நாம் பெற்ற செல்வத்தைக் கடவுளின் மக்களுக்காகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வோம்.
சிந்தனைக்கு:
 தன்னலத்தோடு வாழ்வோர் உயிரோடு இருக்கையிலேயே இறந்துவிடுகின்றார். பிறர் நலத்தோடு இருப்பவர் இறந்தும் உயிர் வாழ்கின்றார்.
 ஆண்டவர் அனைவரிலும் குடிகொண்டிருக்கும்போது, ஒருவரை இழிவு படுத்துவது ஆண்டவரை இழிவுபடுத்துவதற்கு இணையானது.
 கடவுள் கொடுத்த வாழ்வு. அதைக் கொண்டு நாம் அவரின் பெருமையைப் பறைசாற்றுவோம்.
இறைவாக்கு:
‘ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்’ (நீமொ 14:21) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் ஏழைகளுக்கு இரங்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.