வாசக மறையுரை (பிப்ரவரி 23)
பொதுக் காலத்தின் ஏழாம் வாரம்
புதன்கிழமை
I யாக்கோபு 4: 13-17
II மாற்கு 9: 38-40
“அது பாவம்”
நமது பாவங்கள் இயேசுவை வருத்தும்:
பெரும் பாவி ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், படைவீரர் ஒருவர் இயேசுவைத் தனது கையில் உள்ள சாட்டையால் அடித்துத் துன்புறுத்துவதையும், அதனால் இயேசுவின் உடலிலிருந்து இரத்தம் வழிந்தோடுவதையும் கண்டான். இக்காட்சி பாவிக்கு அதிர்ச்சியைத் தந்தது.
இதைத் தொடர்ந்து பாவி, இயேசுவை அடித்துத் துன்புறுத்தும் படைவீரர் அருகில் சென்று, அவரைத் தடுத்து நிறுத்த முயன்றான். படைவீரர் அருகில் சென்று, அவரைத் தடுத்து நிறுத்தியபோதுதான் பாவிக்குத் தெரிந்தது, அந்தப் படைவீரர் வேறு யாருமல்லர், தானே என்பது. உடனே பாவி, தன்னுடைய பாவங்கள்தான் இயேசுவை இப்படியெல்லாம் வதைக்கின்றன என்று, அன்றிலிருந்து பாவம் செய்வதை விட்டுவிட்டான்.
மனிதர்களாகிய நாம் பலவிதங்களில் பாவம் செய்து, இயேசுவைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை இரண்டுவிதமான பாவங்களை பட்டியலிடுகின்றது. அவை என்னென்ன என்று நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மனிதர் செய்யும் பாவங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தீமை செய்தல். இரண்டு, தீமை செய்வதைத் தடுக்காதிருத்தல். மூன்று, நன்மை செய்யாதிருத்தல். நான்கு. நன்மை செய்வதைத் தடுத்தல். இன்றைய இறைவார்த்த்தை மூன்றாவது மற்றும் நான்காவது பாவத்தைப் பற்றிப் பேசுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு, “நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும், அவர் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்” என்கிறார். பலருக்கு நன்மை செய்யத் தெரியும்; ஆனாலும் நன்மை செய்வதில்லை. இது பாவம் என்று குறிப்பிடுகின்றார் யாக்கோபு. அடுத்ததாக, இன்றைய நற்செய்தியில், இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்ட முயன்றபோது, அதை யோவான் நடக்கப் பார்க்கின்றார். இதுவும் ஒருவகையில் பாவம்தான். ஏனெனில் அந்த மனிதர் நன்மை செய்கிறார். அதை யோவான் தடுக்கப் பார்க்கிறார்.
இது குறித்து இயேசு யோவானுக்குப் பதிலளிக்கும்போது, “நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்கிறார். ஆதலால், எது பாவம், எது நன்மை என அறிந்த நாம், பாவத்தை விட்டுவிட்டு, நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம். ஏனெனில், நாம் நன்மைகளைச் செய்யும்போது கடவுளின் மக்களாகின்றோம்.
சிந்தனைக்கு:
நன்மைகளின் ஊற்றான இயேசுவை ஒவ்வொருநாளும் உட்கொள்ளும் நாம் நன்மை செய்ய வேண்டாமா?
உலகில் பெருகும் தீமைகளுக்குக் காரணம் நல்லவர்களின் அமைதியே!
நமக்கு முன்பு நன்மை, தீமை என்று இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இதில் நாம் நன்மையைப் பற்றிக்கொண்டு, நன்மை செய்வோம்.
இறைவாக்கு:
‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள்’ (ஆமோ 5:14) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் தீமையை விலக்கி, நன்மை செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.