கடவுளின் கனிவான பார்வையோடு உலகை நோக்க கற்றுக்கொள்வோம்

பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்” (காண்க. யோவா.9:1-41) என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒன்றிணைந்து பார்த்தல்”(Voir Ensemble ) என்ற பிரெஞ்சு நாட்டு அமைப்பின் 25 பிரதிநிதிகளை, பிப்ரவரி 19, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து அவர்களோடு தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

முழுவதும் பார்வையற்றவர் மற்றும், பார்வைக் குறைபாடுள்ளவர் ஆகியோர், நற்செய்தியின் மகிழ்வில் உடன்பிறப்பு உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு உதவி வரும் “Voir Ensemble” அமைப்பினரின் பணிக்கு முதலில் தன் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்காலத்தில் நாம் மிகவும் மேலோட்டமாக, வெளிப்புறப் பொருள்களையே கூர்ந்து கவனிக்கிறோம் எனவும், உடல்தோற்றம், அவர்கள் அணியும் ஆடைகள், அவர்களின் வீடுகள், விலையுயர்ந்த வாகனங்கள், சமுதாயத்தில் அவர்களின் நிலைமை, சொத்து போன்றவற்றை வைத்தே மக்கள் மதிப்பிடப்படுகின்றனர் என்று திருத்தந்தை கூறினார்.

நோயாளிகள் அல்லது மாற்றுத்திறன்கொண்டோரை, அவர்களின் வலுவற்ற நிலையோடு நாம் ஏற்கவேண்டும் என்று நற்செய்தி நமக்குப் போதிக்கின்றது என்றும், இயேசு, பார்வையற்றவரை உற்றுநோக்கியது, அவரோடு சந்திப்பு நிகழ்த்த அழைப்பு விடுத்தது என்றும், இச்சந்திப்பு, திருஅவை மற்றும், சமுதாயத்தில், உடன்பிறப்பு உணர்வு மற்றும், தோழமையுணர்வைக் கட்டியெழுப்ப பாதையைத் திறக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

அனைவருடன், குறிப்பாக, மாற்றுத்திறன் கொண்டோருடன் ஒருமைப்பாட்டுணர்வை, ஏற்படுத்துவதன் மதிப்பை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, திருஅவை, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி வழங்கும் நகரும் அல்லது தற்காலிக மருத்துவமனை போன்றது என்றும், எத்தனையோ சகோதரர், சகோதரிகளின் காயங்கள் குணப்படுத்தப்படுவதற்கு நீட்டிய கரங்கள் தேவைப்படுகின்றன என்றும், திருத்தந்தை கூறினார்.

இதற்கு மற்றவரோடு, குறிப்பாக, குடும்பத்தில், வலுவற்றநிலையில் வாழ்வோரில், நோய் மற்றும், மரணப்படுக்கையில் இருப்போரோடு நம் உறவுகளை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டியது அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, நம் கிறிஸ்தவ நம்பிக்கை, வெறும் மரபுகளுக்குள் முடங்கிவிடாமல், உடன்பிறப்பு உணர்வுகொண்ட அன்பில் மற்றவரை வரவேற்கும் சான்று வாழ்வை வெளிப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதயத்திலிருந்து பார்ப்பது, உலகையும், நம் சகோதரர் சகோதரிகளையும் கடவுளின் கண்கள் வழியாகப் பார்ப்பதாகும் என்றும், மக்களையும், பொருள்களையும் பார்க்கும் முறையை புதுப்பிக்கவேண்டும் என்று இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவர்கள் ஒளியின் மக்களாக, அதற்குச் சான்று பகரக்கூடியவர்களாக வாழுமாறு வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Voir Ensemble அமைப்பினரின் பணிகளை ஊக்குவித்து, தன் ஆசீரையும் அளித்தார்.

Comments are closed.