பிப்ரவரி 18 : நற்செய்தி வாசகம்
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர், அதைக் காத்துக்கொள்வர்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34- 9: 1
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————-
“இயேசுவின் சீடர் சிலுவையைச் சுமக்க வேண்டும்”
பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I யாக்கோபு 2: 14-24, 26
II மாற்கு 8: 34-9:1
“இயேசுவின் சீடர் சிலுவையைச் சுமக்க வேண்டும்”
பார்வைக் குறைபாடுகளுடன் நற்செய்திப் பணி:
சீனாவைச் சார்ந்த பெண் நற்செய்திப் பணியாளர் கிறிஸ்டியனா சாய் (Christiana Tsai). ஐரோப்பக் கண்டத்திலிருந்து வந்த மறைப்பணியாளர் ஒருவரிடமிருந்து ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைப் பெற்ற இவர், மிக ஆர்வத்துடன் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் இவருக்குத் திடீரெனப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. நாள்கள் மெல்ல நகர நகர .ஒருகட்டத்தில் இவர் முற்றிலுமாகப் பார்வை இழந்தார். இதற்காக இவர் மனம் உடைந்துபோய், மூலையில் முடங்கிவிடவில்லை. மாறாகத் தனது பார்வையின்மை என்ற சிலுவையைத் தாங்கிக்கொண்டே நற்செய்தி அறிவித்து வந்தார். மக்கள் இறைவார்த்தையைக் கேட்க, இவருடைய இல்லத்திற்கு வருவார்கள். இவரும் அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவித்து, ஆயிரக் கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
“என்னைப் பின்பற்ற விரும்பும் தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்” என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தருபவராக இருக்கின்றார் இந்த கிறிஸ்டியானா சாய் என்ற இந்தப் பெண் நற்செய்திப் பணியாளர். நாம் ஒவ்வொருவரும் அவ்வாறு இருக்க இன்றைய இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சிலுவையின்றி இயேசுவைப் பிரித்துப் பார்க்க முடியாது. சிலுவை இயேசுவின் வாழ்வில் மையம். இந்த உண்மை புரியாமல் பேதுரு, ஆண்டவர் இயேசு தம் பாடுகளைப் பற்றி முன்னறிவிக்கும்போது, அது உமக்கு வேண்டாம் என்று சொல்லி அவரது சினத்திற்கு ஆளாகின்றார். இதைத் தொடர்ந்து இயேசு தன்னைப் பின்தொடர விரும்பும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுகின்றபோதுதான், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்” என்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசும் யாக்கோபு, “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்” என்கிறார். எனில், ஒருவர் இயேசுவின் சீடராக இருப்பதற்கு எப்படிச் சிலுவையைச் சுமப்பது இன்றியமையாததோ, அப்படி ஒருவரது நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகி விடும்.
யாக்கோபின் காலத்தில் சிலர் பெயருக்கு ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர் இத்தகைய வார்த்தைகளைச் சொல்ல வேண்டியிருந்தது. நாம் நமது நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுத்து, இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ்ந்திடுவோம்.
சிந்தனைக்கு:
சீடத்துவமும் சிலுவையும் பிரிக்க முடியாதவை
சிலுவைகளைக் கட்டாயத்தின் பேரில் அல்ல, மனமுவந்து ஏற்பதுதான் நல்லது.
நம்பிக்கையையும் செயல்களையும் நமது இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்வோம்.
இறைவாக்கு:
‘பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1யோவா 3:18) என்பார் யோவான். எனவே, நாம் நமது அன்பைச் செயலில் வெளிப்படுத்தி, இயேசுவின் உண்மையான சீடர்களாய் விளங்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.