பிப்ரவரி 16 : நற்செய்தி வாசகம்
பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26
அக்காலத்தில்
இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார்.
இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
மனிதரின் சினம் கடவுளின் திட்டத்திற்கு எதிரானது
பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் புதன்கிழமை
I யாக்கோபு 1: 19-27
II மாற்கு 8: 22-26
மனிதரின் சினம் கடவுளின் திட்டத்திற்கு எதிரானது
எதிரி வெளியேதான்; இங்கு இல்லை:
ஒரு நாடு தனது எதிரி நாட்டின்மீது படையெடுத்துச் சென்றது. எதிரி நாட்டை அடைவதற்கு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கையில், இந்த நாட்டுப் படைவீரர்கள் இருவருக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டு, அது சண்டையில் போய் முடிந்து, கோபத்தில் ஒருவர் மற்றவரைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர்.
இதைப் பார்த்துப் படைத்தளபதி வேகமாக விரைந்து வந்து, அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார். பின்னர் அவர் அவர்கள் இருவரைப் பார்த்து, “எதிரி வெளியேதானே அன்றி, இங்கு இல்லை. நீங்களே இப்படிச் சண்டை போட்டுக் கொண்டால், நம்மை வீழ்த்துவதற்கு எதிரிகள் தேவையில்லை; நாமே போதும்” என்றார். இதன்பிறகு அந்த இரண்டு படைவீரர்களும் சத்தம் காட்டாமல், முன்னோக்கி நகர்ந்தார்கள்.
ஆம், சினத்தில் பிறரோடு சண்டைபோடுபவருக்கும், சினத்தில் செயல்படும் எவருக்கும் எதிரி என்று யாருமே தேவையில்லை. அவருக்கு எதிரி அவரேதான். இன்றைய முதல் வாசகம், “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது” என்கிறது அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும்” என்று சொல்லும் யாக்கோபு, ஏன் நாம் சினம் கொள்வதில் தாமதம் காட்டவேண்டும் என்பதற்கான பதிலை அதற்கு அடுத்த இறைவார்த்தையில் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.
“மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாக இருக்கின்றது” – இதுதான் நாம் ஏன் சினம் கொள்வதில் தாமதம் காட்டு வேண்டும் என்கிற கேள்விக்கு யாக்கோபு கூறும் பதிலாக இருக்கின்றது.
சிலர் தங்களுக்குச் சினம் வந்துவிட்டால் கண் தெரியாதவர்களைப் போன்று செயல்படுவது உண்டு. இப்படி அவர்கள் செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சினம் கொள்ளும் எவரும் பார்வையற்றவர்கள்தான் என்பதைக் குறித்துக் காட்டுவதற்காகத்தானோ என்னவோ, இயேசு இன்றைய நற்செய்தியில் பார்வையற்ற ஒருவருக்குப் பார்வையளிக்கின்றார். ஆதலால் ஒருவர் சினம் கொள்வதால் ‘அகப் பார்வையின்றிச் செயல்பட வாய்ப்புள்ளது. அதுவே கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாய் இருக்கக் காரணமாகவும் இருக்கும்.
எனவே, நாம் சினத்தைத் தவிர்த்து, கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறக் காரணமாக இருப்போம்.
சிந்தனைக்கு:
சினத்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றில்லை; அன்பாலும் சாதிக்கலாம்.
சினம் சக மனிதருக்கும் நமக்கு விரிசல் உண்டாக மூல காரணம்
சினத்தைத் தவிர்ப்போர், சிகரத்தை அடைவர்
இறைவாக்கு:
‘சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது’ (நீமொ 27:4) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் சினத்தைத் தவிர்த்துப் பொறுமையோடும் அன்போடும் வாழக் கற்றுக்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.